ஆம்புலன்ஸ்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்ததால் தாய் உயிரிழப்பு! இது திருவாரூர்!
க.பாலகுரு,
ஆம்புலன்ஸ்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்ததால் தாய் உயிரிழப்பு - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு.
திருவாரூர் மாவட்டம் சித்தரையூர் பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் சுந்தராம்பாள் தம்பதியின் மகளான சௌமியா (26 வயது) என்பவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட மணலூர் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கருவுற்றிருந்த சௌமியா தனது தாய் வீட்டில் இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் திருவாரூர் விஜயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சின்ன ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும் திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதை தொடர்ந்து நேற்று முன் தினம் காலை சௌமியாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் சௌமியாவுக்கு வலிப்பு ஏற்பட்டயு.
அவருக்கு திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சௌமியாவை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சௌமியா இறந்து விட்டதாக கூறினர். அதை கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தை பிறந்த பிறகு நன்றாக இருந்த குழந்தையின் தாய் சௌமியாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால் உயர் சிகிச்சைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஒரு மணி நேரத்திற்கு மேல் 108 ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக விஜயபுரம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருந்தும் ஓட்டுநர் இல்லாததால், வேறொரு ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் உயர் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஒரு மணி நேரம் தாமதத்தால் தான் சௌமியா இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் இல்லாததால் குழந்தை பெற்றெடுத்த தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

admin
