டிஜிட்டல் அரெஸ்ட் எனும் பெயரில் நூதன மோசடி! மக்களே உஷார்!

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் பெயரில் நூதன மோசடி! மக்களே உஷார்!

கு.அசோக்,

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் பெயரில் நூதன மோசடி - 542 சிம் கார்டுகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் சுருட்டிய 5 பேரை கைது செய்த இராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீசார்.

  இராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் எனும் பெயரில் நூதன முறையில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.

  வழக்கின் பின்னணி:மத்திய அரசு அதிகாரிகள் அல்லது சிபிஐ   அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடி குறித்து இராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதியன்று புகார் கிடைத்தது.

  இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவிட்டார்.

  அதன் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளர், அரக்கோணம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர், அரக்கோணம் சிறப்பு புலனாய்வு குழு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் 5 சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். 

   குறிப்பாக புகாரில் கிடைக்கப்பெற்ற செல்போன் எண்களின் அடிப்படையில், வங்கி கணக்குகள், செல்போன் பதிவுகள் மற்றும் புலன் விசாரணைக்கு பயன்படுத்தப்படும் பிரத்தியேக மென்பொருள் ஆகியவற்றின் உதவியோடு புலன் விசாரணை நடத்தப்பட்டது.

  சிம் கார்டு மோசடி:-குற்றவாளிகள் பயன்படுத்திய  எண்களை ஆய்வு செய்ததில், கடந்த ஓராண்டில் மட்டும் அந்த எண்களைப் பயன்படுத்தி 542 சிம் கார்டுகள்  மாற்றப்பட்டு பல்வேறு நபர்களை மிரட்டி லட்சக்கணக்கான பணம் பறித்த உண்மை தெரியவந்தது.

   இதில் பெரும்பாலும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனிமையில் உள்ள முதியவர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் என பல்வேறு நபர்கள் பதிக்கப்பட்டது தெரியவந்தது.

  மேலும் அவர்களுடைய தொலைபேசி எண்ணை தொடர்ந்து கண்காணித்ததில் சிம் கார்டு வாங்குவதற்காக அந்த கும்பல் தமிழகம் வந்திருப்பது தெரிய வந்தது.

   இதனை தொடர்ந்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிங்கம்பல்லி கணேஷ்(36), பப்பலா கிஷோர்குமார்(36), செல்லா சந்தீப்குமார்(27), சனபதி பிரசாத்(28), தல்லா ராமகிருஷ்ணன்(29) ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

  மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகள், இவர்களது நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற மாநிலங்களில் இவர்கள் செய்துள்ள குற்றங்கள் குறித்து போலீசார் தற்போது போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

   "டிஜிட்டல் அரெஸ்ட்" என்ற பெயரில் எந்த ஒரு அரசு அதிகாரியும் வாட்ஸ்அப் மூலம் உங்களை விசாரணை செய்ய மாட்டார்கள். அடையாளம் தெரியாத நபர்களிடம் உங்கள் வங்கித் தகவல்களையோ அல்லது தனிப்பட்ட விவரங்களையோ பகிர வேண்டாம்.

   சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது    இணையதளத்தையோ தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசாரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.