பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது? ராணுவ தளபதி எச்சரிக்கை!
நரேஷ்.என்,
தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் உலவரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது என்று இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார்.
குஜராத்தின் ரான் ஆப் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையே சர் க்ரீக் கழிமுக பகுதி உள்ளது. சர்ச்சைக்குரிய இந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத்தின் பூஜ் நகரில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ வீரர்களுடன் தசரா விழாவை கொண்டாடினார். அப்போது அவர் பேசுகையில்,'' சர் க்ரீக் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் ஒப்பு கொள்ளவில்லை.
அந்த பகுதியில் பாகிஸ்தான் கட்டமைப்புகளை விரிவுபடுத்தினால் வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்'' என்றார்.
மேலும் ராஜஸ்தான்,ஸ்ரீகங்கா நகர் மாவட்டம், அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி நேற்று பேசுகையில்,'' அண்டை நாட்டின் அரசு தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் ஆபரேஷன் சிந்தூர், 1.0 நடவடிக்கையின் போது இருந்த கட்டுப்பாட்டை பராமரிக்க மாட்டோம்.
இம்முறை பாகிஸ்தான் புவியியலில் இருக்க விரும்புகிறதா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டிய ஒன்றை நாங்கள் செய்வோம். வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால் அரசால் ஆதரிக்கப்படும் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்.
தீவிரவாதத்தை நிறுத்த மறுத்தால் ஆபரேஷன் சிந்தூர்' 2.0 வெகு தொலைவில் இல்லை என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்'' என்றார்.

admin
