திருப்பத்தூர் போதை சிறுவர்கள்! போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?
ஜி.குலசேகரன்,
"வீடியோ எடுத்தாலும் பயமில்லை கஞ்சா போதையில் பணம் கேட்டு துன்புறுத்தும் இளைஞர்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தூய நெஞ்சக் கல்லூரி அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்கள் பொதுமக்களிடம் மற்றும் மாணவர்களிடம் பணம் கேட்டு துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
அப்பகுதியில் சுற்றித்திரியும் சில இளைஞர்கள், கஞ்சா மற்றும் மதுபானம் அருந்திய நிலையில் காணப்படுவதாகவும், வழிப்போக்கர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர்களிடம், "நீங்கள் பார்த்தீர்களா? எவ்வளவு நாள் வீடியோ எடுக்கிறீர்கள்? போலீஸ் வந்தாலும் எங்களால் ஒன்றும் ஆகாது" என்று அசட்டுத்தனமாக பதிலளித்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்றபோதும் அச்சமின்றி பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சம் நிலவுகிறது.
மேலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எதிராக உடனடி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறு வயதிலேயே போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கி தங்களது வாழ்க்கையை பாதித்துக்கொள்ளும் இளைஞர்களை மீட்க விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கல்லூரி வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சுற்றுப்புறங்களில் காவல் துறை ரோந்து அதிகரித்து, மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி பயிலும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

admin
