அடர் காடுகளை அதானி குழுமத்துக்கு தாரை வார்க்க முயன்றதா திமுக அரசு!
ஜி.குலசேகரன்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரதான காடுகளை சத்தமில்லாமல் அதானி குழுமத்துக்கு தாரை வார்க்க அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் திமுக அரசு செய்து விட்டு கிளம்பி போய் இருப்பதாக கூறப்படுகிறது
இந்நிலையில் அதானியின் நீரேற்று திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது இதனால் வேலூர் திருப்பத்தூர்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை,காஞ்சிபுரம்,.செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் இதனை தடுத்து நிறுத்த விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை - ரூ,10 ஆயிரம் கோடி நீரின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க அதானி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுனர் மதிப்பீட்டுக் குழுவிடம் 15.06.2026 அன்று அதானி குழுமத்திற்குச் சொந்தமான அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337. 452 எக்டேர் நிலப்பகுதியில் 228.352 எக்டேர் நிலப்பகுதி அல்லேரி காப்புக்காடுகளுக்கு உட்பட்ட பகுதியாகும். அடர்க்காடுகள், புதர்க்காடுகள் ஆகியவற்றைக் கொண்ட இக்காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளதால் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
07.01.2024 அன்று தமிழ் நாடு அரசுடன் அதானி கிரீன் என்ற நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று நீர்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி அல்லேரி, தென்மலை. ஆழியார் ஆகிய இடங்களில் நீரேற்றுப் புனல்மின் நிலையம் அமைக்கும் திட்டங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அல்லேரியில் அமைக்கப்படவுள்ள நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
அல்லேரி காப்புக்காடு அமைந்துள்ள மலையில் 494.71மீ நீளமும் 64 மீ உயரமும் கொண்ட 12.08 எம்.சி.எம் கொள்ளளவு கொண்ட மேலணையும், அல்லேரி மலையடிவாரத்தில் 1823மீ நீளமும் 34மீ உயரமும் கொண்ட கீழணையும் புதிதாகக் கட்டி 1800 மெகாவாட் (6*300 மெகாவாட்) உற்பத்தித் திறன் கொண்ட நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பதுதான் இத்திட்டமாகும்.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 10 ஆயிரம் கோடியாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் இரண்டும் அல்லேரி காப்புக்காட்டுக்குள் அமைந்துள்ளன.
இவ்விரண்டு நீர்த்தேக்கங்களுக்கிடையே தண்ணீரை சுழற்சி செய்வதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்களுக்காக எக்டேர் கணக்கிலான நிலம் நீரில் மூழ்கடிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்குத் தேவையான நீரானது கீழணையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு பாலாற்றிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் 28 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் பாலாற்றிலிருந்து நீரானது உரிஞ்சப்படும்.
இவ்வாறு நீர் எடுக்கப்பட்டால்திருப்பத்தூர்,வேலூர்.ராணிப்பேட்டை,திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதுடன் விவசாயம் முற்றிலும் அழிக்கபடும் இம்மாவட்டங்கள் பாலைவனமாக மாறும்.
இந்த திட்டத்திற்காக 15-6-2026 அன்று அதானி நிறுவனம் புதிய தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என விவசாயிகள் பொதுமக்கள் வன ஆர்வலர்கள் கோருகின் றனர்.
இந்த இரண்டு தடுப்பணைகள் அல்லேரியில் கட்டப்பட்டால் வன உயிரினங்கள் அழிவதுடன் ஜவ்வாது மலை தொடருக்கு ஆபத்து ஏற்படும் மலை வாழ் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் இத்திட்டப் பகுதி ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளின் சுற்றுச்சூழல் வழித்தடத்தோடு இணைந்துள்ளதால், இப்பகுதிகளுக்கு இடையே பறவைகளும் விலங்குகளும் தடையின்றி இடம்பெயர்கின்றன.
எனவே, ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிரினங்களும் இந்த திட்ட அமைவிடத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.மலையிலிருந்து வரும் தண்ணீர், ஏரி, கிணறுகளை நிரப்புகிறது. அதன் மூலம் மலையடிவாரத்தில் அதிகளவில் தோட்டப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன, கடலை, கீரை, முள்ளங்கி, கத்தரிக்காய் ஆகியவை அதிகம் விளைவிக்கப்படுகிறது. இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள் கத்தரிக்காய் புவிசார் குறியீடு புவிசார் குறியீடு பெற்றது. மலையடிவாரத்தில் அமைக்கப்படும் நீர்த்தேக்கம் இவ்விவச்சாயத்தைப் பாதிக்கும்.
கீழணைக்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் எனுமிடத்தில் உள்ள பாலாற்றில் இருந்து நீர் கொண்டு வரப்படும் என திட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நீரை அமைப்பதற்கான குழாய் அமைக்கப்படும் இடங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களாகும். பாலாற்றில் ஆண்டின் 365 நாட்களில் 65 நாட்கள் தண்ணீர் பாய்வதே அரிதானது.
வறட்சி அதிகமுள்ள, அதிகளவில் வெப்பநிலை பதிவாகக் கூடிய இடத்தில் நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பது சரியான முடிவில்லை. மேலும் அரிய வகையான அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்கள் வாழும் காட்டுக்குள் 228 எக்டேரை அழிப்பது ஏற்புடையதல்ல. இக்காடுகளை அழிப்பதால் கானுயிர்களின் வாழிடம் அழிவதோடு வெப்பம் அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். தமிழ் நாடு அரசு உடனடியாக அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.அதை நிராகரிக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோருகின்றனர்.

admin
