திமுக தலைமையுடன் செந்தில் பாலாஜிக்கு விரிசலா? – தொடர் வழக்குகளால் அதிகரிக்கும் அரசியல் நெருக்கடி!

திமுக தலைமையுடன் செந்தில் பாலாஜிக்கு விரிசலா? – தொடர் வழக்குகளால் அதிகரிக்கும் அரசியல் நெருக்கடி!

ஜி. சாந்தகுமார்,

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபகாலமாக கட்சித் தலைமையிடம் இருந்து விலகியே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கும் திமுக தலைமைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு, டாஸ்மாக் மதுபான கொள்முதல் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு, தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரம் நடத்த முயன்றதாக கூறப்படும் விவகாரம் என செந்தில் பாலாஜியைச் சுற்றி அடுத்தடுத்து வழக்குகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இதனால், திமுக ஆட்சியிலும் கட்சியிலும் செந்தில் பாலாஜியை மையமாக வைத்து ஏற்பட்டுள்ள அரசியல் பாதிப்புகள் குறித்து கட்சித் தலைமை கவலை அடைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

தொடர் புகார்கள்

திமுக வரலாற்றில் ஒரு மூத்த நிர்வாகிக்கு எதிராக இவ்வளவு வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது அரிது என்றும், இதன் காரணமாகவே கடந்த திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு கட்சித் தலைமையால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜியை மையமாக வைத்து தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்ததாகவும், இதனால் கரூர் சம்பவங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் திமுகவுக்கு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைகளின்போதும், செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரங்கள் குறித்து மூத்த நிர்வாகிகள் தலைமையிடம் புகார் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமையிடம் இருந்து விலகுகிறாரா?

இதற்கிடையே, தன்னைப் பாதுகாக்க இனி திமுக தலைமை உதவாது என செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்கும் கருதுவதாகவும், மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்பான வழக்குகளில் இருந்து விடுபட டெல்லி அரசியல் வட்டாரங்களுடன் நேரடியாக நெருக்கம் காட்டி வருவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திமுக தலைமையிலிருந்து வரும் அழைப்புகளை பல்வேறு காரணங்களைக் கூறி செந்தில் பாலாஜி தவிர்த்து வருவதாகவும், சென்னையில் இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்திப்பதை முடிந்தவரை தவிர்த்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவையிலும் திமுக மூத்த நிர்வாகிகளிடம் அவர் அதிகம் பேசுவதில்லை என்றும், பல நாட்கள் கட்சியினரின் தொடர்புக்கு அப்பால் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் இந்த அணுகுமுறையால் அவரது அடுத்தகட்ட அரசியல் திட்டம் என்ன என்பது குறித்து திமுக தலைமை குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், செந்தில் பாலாஜி மற்றும் திமுக தலைமை இடையே உண்மையிலேயே விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தரப்பிலிருந்தும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.