கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா!லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் – சிறப்பு ரெயில், பேருந்து ஏற்பாடுகள் தீவிரம்

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா!லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் – சிறப்பு ரெயில், பேருந்து ஏற்பாடுகள் தீவிரம்

செய்தி: இளங்கோவன்,

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா, இன்று ஆகஸ்ட் 29-ம் தேதி பாரம்பரிய முறைப்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பிரசித்தி பெற்ற திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவையொட்டி, கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பேராலய வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனைகளுக்குப் பின்னர் கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவை வழிபட்டனர்.

பக்தர்களுக்காக சிறப்பு போக்குவரத்து
திருவிழாவையொட்டி பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை இந்த சிறப்பு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. சார்லபள்ளி–வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் சேவைகள் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன.

பேருந்துகளில் முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருவிழா நாட்களில் கூட்ட நெரிசல், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.

ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கிய திருவிழா, செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும் முக்கிய விழாவுடன் நிறைவடைகிறது