தனித் தொகுதி” என்ற வார்த்தையே தண்டனை போல் உள்ளது! சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ. சிந்து அதிரடி கோரிக்கை – கவனத்தில் எடுத்த சபாநாயகர்

தனித் தொகுதி” என்ற வார்த்தையே தண்டனை போல் உள்ளது!  சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ. சிந்து அதிரடி கோரிக்கை – கவனத்தில் எடுத்த சபாநாயகர்

ம.பா. கெஜராஜ்,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ‘தனித் தொகுதி’ என அழைக்கப்படும் தொகுதிகளுக்கு வழங்கப்படும் இந்த பெயரே, சமூகத்தில் ஒரு பிரிவினை அல்லது தனிமைப்படுத்தலை குறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அதற்கு மாற்றாக ‘சிறப்பு உரிமை’ போன்ற பொருத்தமான சொல்லை பயன்படுத்த வேண்டும் என குடியாத்தம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சிந்து வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக சபாநாயகர் தெரிவித்தது பேரவையில் கவனம் பெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (27-08-2026) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய குடியாத்தம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சிந்து, தனது அலுவலகத்திற்கு வரும் கடிதங்களில் கூட அடைப்புக்குறிக்குள் ‘தனித் தொகுதி’ என்ற வார்த்தை குறிப்பிடப்படுவதாகக் கூறினார்.

“‘தனி’ என்ற சொல் பொதுவான பயன்பாட்டில் பிரிவினை அல்லது தண்டனை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. ‘அந்த பெண்ணை தனியாக வையுங்கள்’, ‘அவனை தனிமைப்படுத்துங்கள்’, ‘அவனை சிறையில் வையுங்கள்’ என்று கூறுவது போன்ற எண்ணத்தை இந்த வார்த்தை ஏற்படுத்துகிறது.

இடஒதுக்கீடு என்பதற்கு ‘தனி’ என்பது நேரடியான அர்த்தம் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் 332-வது பிரிவின் கீழ் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமையை கருத்தில் கொண்டு, ‘தனித் தொகுதி’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘சிறப்பு உரிமை’ போன்ற பொருத்தமான சொல்லை பயன்படுத்த வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்தார்.

மேலும், “தமிழில் ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்” எனக் குறிப்பிட்ட எம்.எல்.ஏ. சிந்து, பெயரிலேயே ஒரு பிரிவினை உணர்வு ஏற்படாத வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், எம்.எல்.ஏ. முன்வைத்துள்ள யோசனையை முதல்வர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஒரு வார்த்தை என்பது வெறும் வார்த்தை அல்ல; அது ஏற்படுத்தும் எண்ணமும் முக்கியம். ‘தனித் தொகுதி’ என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்ற இந்த கோரிக்கை, பேரவையில் சாதாரண கோரிக்கையாக மட்டுமின்றி, சொல்லாட்சியிலும் சமூகநீதியிலும் கவனம் செலுத்த வேண்டிய விவாதமாக மாறியுள்ளது