80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்!

80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்!

ம.பா.கெஜராஜ்,
சென்னை: நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.


சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக காவல் வாகனங்கள் புடைசூழ புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். அவரை தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, முப்படைகளின் உயர் அதிகாரிகளை முதலமைச்சருக்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார்.


இதையடுத்து முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பை பார்வையிட்ட முதலமைச்சர், விழாவில் பங்கேற்க வந்திருந்த சபாநாயகர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கைகூப்பி வரவேற்றார்.


பின்னர் கோட்டை கொத்தளத்துக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.


விழாவில் முதலமைச்சர் விஜய்யின் தாய் சோபனா, தந்தை சந்திரசேகர், நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“உண்மையான சுதந்திரம் என்பது சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளை உடைப்பது!”
விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் விஜய், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
“தங்கள் உயிர், உடமை, வாழ்க்கையை இழந்து நமக்காக சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனைவருக்கும் எனது வீர வணக்கங்கள்.

பிரபலமானவர்கள், பெயர் தெரியாதவர்கள் என ஒவ்வொருவரின் தியாகத்தையும் நாம் நினைவுகூர வேண்டும்” என்றார்.
மேலும், “நாம் அடிமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் வந்தாலே மக்களிடையே ஒற்றுமை உருவாகும். அனைவரும் ஒன்றிணையும்போது சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகள் உடைந்து நொறுங்கும். அங்கிருந்துதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும்” என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மகாத்மா காந்தியின் தலைமையில் இந்தியா சுதந்திரம் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், பெற்ற சுதந்திரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நாடு படிப்படியாக முன்னேறி வருவதாகவும், இந்த முன்னேற்றத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது அனைவரின் கடமை என்றும் கூறினார்.
“லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதும் விடுதலைதான்”
“நமது தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்குச் சமமான ஒரு விஷயம்தான். அதை நோக்கித்தான் நமது அரசு செயல்பட்டு வருகிறது” என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.


386 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் 80வது சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றவும், மக்கள் மத்தியில் உரையாற்றவும் வாய்ப்பு அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், ஜென்சி இளம் சிங்கப்படை தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, லஞ்சம், ஊழல் இல்லாத, போதைப் பொருள் கலாச்சாரம் இல்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான, சமூகநீதி அடிப்படையிலான, வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
“மக்கள் நலனே முக்கியம்; மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு”
பொதுவாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது என்றும், மக்கள் நலன்தான் மிக முக்கியம் என்றும் கூறிய முதலமைச்சர் விஜய், அந்த அடிப்படையிலேயே தவெக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் செயல்படுவோம் என்றும், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மாநில அரசுக்கு எதிரான மத்திய அரசின் முடிவுகளை தவெக அரசு எப்போதும் எதிர்க்கும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், முந்தைய ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், குறிப்பாக அம்மா உணவகத் திட்டத்தை மேலும் மெருகேற்றி வருவதாகவும் கூறினார்.
அதேபோல், காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.