இட்லி விற்கும் மூதாட்டிக்கு ₹91 லட்சம் GST நோட்டீஸ்! மகளின் மருத்துவ செலவுக்காக பணம் எடுக்கச் சென்றபோது வங்கி கணக்கு முடக்கம் – ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார்!

இட்லி விற்கும் மூதாட்டிக்கு ₹91 லட்சம் GST நோட்டீஸ்! மகளின் மருத்துவ செலவுக்காக பணம் எடுக்கச் சென்றபோது வங்கி கணக்கு முடக்கம் – ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார்!

செய்தி: ஜி. குலசேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வசந்தா (60). கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், குடும்பச் செலவுகளை சமாளிக்க வசந்தா அப்பகுதியில் சிறிய அளவில் இட்லி விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது மகளின் மருத்துவச் செலவுக்காக வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்கச் சென்றபோது, அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் விசாரித்தபோது, சேலம் GST அலுவலகத்திலிருந்து தனக்கு நோட்டீஸ் வந்திருப்பதாகவும், அதில் தனது பெயரில் சுமார் ₹91 லட்சத்து 14,376 GST வரி பாக்கி இருப்பதாகவும், அந்தத் தொகையை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தா, அன்றாட வாழ்வாதாரத்திற்காகவும் அவசரத் தேவைகளுக்காகவும் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தைக் கூட எடுக்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ஆவணங்களை யாரோ தவறாகப் பயன்படுத்தி போலி நிறுவனம் உருவாக்கி GST வரி மோசடி செய்திருக்கலாம் என்றும், அந்த நிறுவனத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் வசந்தா தெரிவித்துள்ளார்.

“எனது ஆவணங்களை தவறாக பயன்படுத்தி மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, முடக்கப்பட்டுள்ள எனது வங்கிக் கணக்கை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருக்கிறார். 

இதுதொடர்பாக வசந்தா திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட எளிய மக்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி இதுபோன்ற GST மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வேலூர் சரகத்தில் மட்டும் இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் புகார்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இந்த விவகாரம் விரைவில் பொதுநல வழக்காக மாறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.