காவிரி முதல் நீட் வரை... தென்மண்டல கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைக் குரல் எழுப்பிய முதல்வர் விஜய்!
ம.பா.கெஜராஜ்,
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்தில், தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கீழ்நிலை நீர்ப்பிடிப்பு மாநிலங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நீதித்துறை உத்தரவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிளஸ்-2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். கிராமப்புற ஏழை மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்றும், இதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை வைத்தார்.
தென் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு நியாயமான நிதிப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், ஜிஎஸ்டி தொடர்பான முடிவுகளில் மாநிலங்களுக்கு மீண்டும் நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், போதைப்பொருள் ஒழிப்பு, கடல்சார் பொருளாதாரம், துறைமுகங்கள், சரக்கு போக்குவரத்து, மீன்வளம், கடல் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
கர்நாடகாவின் பொம்மச்சந்திரா முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கிடையேயான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் முக்கியத்துவம் அளித்தார்.
தமிழகத்தின் நதிநீர் உரிமை, கல்வி உரிமை, மாநிலங்களின் நிதி உரிமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை ஒரே மேடையில் முதல்வர் விஜய் முன்வைத்தது கவனம் பெற்றுள்ளது.

admin
