நேபாளத்தில் கோர வெள்ளம்: 626 பேர் பலி; 2,400 பேர் மாயம்
செய்தி: நரேஷ்.என்,
காத்மாண்டு: நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 626 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போதேகோஷி ஆற்றுப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதையடுத்து நேபாள ராணுவம், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரும் அதிக அளவில் இருப்பதால், அவர்களை கண்டறிவதிலும் நேபாள அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் பட்டியலில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரசுவா, நுவாகோட், தாடிங் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் நேபாள அரசு கேட்டுக்கொண்டுள்ளது

admin
