புதிதாக 56,659 ஏரிகள் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம்!

புதிதாக 56,659 ஏரிகள் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம்!

ம.பா.கெஜராஜ்,

   உலகம் முழுவதும் புதிதாக 56,659 ஏரிகள் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளர். இதற்கு பின்னால் பூமி வெப்பமயமாகுதல் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

 உலகளவில்  புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் மிக வேகமாகக் கரைந்து வருகின்றன. இதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் புதிதாக 56,659 ஏரிகள் உருவகியிருப்பதாகச் சமீபத்திய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

   இந்தத் திடீர் மாற்றம் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கைப் பேரிடர்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

     உலகம் முழுவதும் வெப்பநிலையில் தாக்கல் வழக்கத்திற்கு மாறாக இருந்து வருகிறது. மேலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, துருவப் பகுதிகள் மற்றும் உயர்ந்த மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பனிப்பாறைகள் கட்டுக்கடங்காத வெப்பம் காரணமாக வேகமாக உருகி நீராக மாறுகின்றன.

  இவ்வாறு உருகும் நீர், பனிப்பாறைகளின் அடிவாரங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் தேங்கி புதிய ஏரிகளாக உருவெடுக்கிறது. செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், குறுகிய காலத்தில் இத்தனை ஆயிரக்கணக்கான ஏரிகள் தோன்றியிருப்பது புவி வெப்பமயமாதலின் கொடூரமான முகத்தைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

   மேலும், இவ்வாறு உருவாகும் புதிய ஏரிகள் பார்க்க அழகாகத் தோன்றினாலும், அவற்றால் பேராபத்து காத்திருக்கிறது. இந்த ஏரிகளின் கரைகள் இயற்கையாகவே பனி மற்றும் பாறைக் கழிவுகளால் அமைக்கப்பட்டவை என்பதால், அவை பலவீனமாகவே இருக்கும்.

   ஏரியில் நீரின் அளவு அதிகரிக்கும் போதோ அல்லது நிலநடுக்கம் போன்ற அதிர்வுகள் ஏற்படும்போதோ, இந்த இயற்கை அணைகள் உடைந்து பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  அதே போல், திடீரென லட்சக்கணக்கான கன அடி நீர் ஆர்ப்பரித்து இறங்கும்போது, மலையடிவாரத்தில் வாழும் கிராமங்கள், நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அனைத்தும் நொடிப் பொழுதில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும், மலைப்பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் உயிரும் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது.

   எனவே, புதிதாக உருவாகியுள்ள இந்த ஏரிகளின் நீர்மட்டத்தை எந்நேரமும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், ஆபத்தான நிலையில் உள்ள ஏரிகளில் இருந்து நீரை பாதுகாப்பாக வெளியேற்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக உலகளவில் இந்த இயற்கை சீற்றம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அவை அனைத்துமே மனிதர்களுக்கு மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளுக்கும் ஆபத்தே.