மேகதாது திட்டத்தால் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் பயனடையும்! சொல்கிறார் அமைச்சர் டி.கே.சிவகுமார்!

ம.பா.கெஜராஜ்,
மேகதாது திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் பயனடையும் என்று கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிப்படி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை ஆளும் காங்கிரஸ் தொடங்கி உள்ளது.
கர்நாடக அரசு மேகதாது என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போதைய துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள டி.கே.சிவகுமார் இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; "மேகதாது திட்டம் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்குமான திட்டம்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக மாநில அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் மேகதாது திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என தமிழக அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் பயனடையும். மேகதாதுவால் காவிரி படுகை விவசாயிகளுக்கு பாசன நீர் மற்றும் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது தனக்கு கோபமோ, வெறுப்போ இல்லை. மேகதாது திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் நான் முறையிடுவேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை, 'தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது.
தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.
அணையால் தமிழகத்திற்கு அதிக பயன் உள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கீடு நீர் கிடைக்கும்' என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.
கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது. மேலும், நான் முதலமைச்சராக இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.
பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன் என கூறி உள்ளார்.
ஆனால் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளிக்கையில மேகதாது அணை கட்டினால் கர்நாடகா மாநிலத்திற்கு மட்டுமே பயன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.