திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை! ரூ.160 கோடி மதிப்பில் வரலாற்றுச் சாதனை!

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை! ரூ.160 கோடி மதிப்பில் வரலாற்றுச் சாதனை!

லைவ்லுக்
செய்தி: வி.டி. வித்தியாசாகர்,
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான இந்த பிரம்மாண்டக் காணிக்கை, திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் தனிநபர் ஒருவர் வழங்கிய மிகப்பெரிய தங்க ஆபரணக் காணிக்கையாகப் பதிவாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், சமூக சேவகருமான வர்த்தமான் ஜெயின் என்பவர் இந்தக் காணிக்கையை வழங்கியுள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு முன்னிலையில், நவம்பர் 26ஆம் தேதி திருமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்க ஆபரணங்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

45 வகையான தங்க ஆபரணங்கள்!

மொத்தம் 121 கிலோ தங்கத்தில் 45 வகையான ஆபரணங்கள் ஒன்பது தொகுப்புகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏழுமலையானின் திருமுடி முதல் திருவடி வரை அலங்கரிக்கும் வகையில் இந்த ஆபரணங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் தங்கக் கிரீடம், சங்கு, சக்கரச் சின்னங்கள், தோள் ஆபரணங்கள், இடுப்புப் பட்டை, கைகளுக்கான ஆபரணங்கள், பத்ம பாதங்கள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நகைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆபரணங்கள் கோயிலின் ஆகம விதிமுறைகள் மற்றும் வழிபாட்டு மரபுகளுக்கு ஏற்ப சுமார் 15 மாத கால உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த நகை தயாரிப்பு நிறுவனத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ஆபரணங்கள் பலத்த பாதுகாப்புடன் திருமலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

யார் இந்த வர்த்தமான் ஜெயின்?

சென்னையைச் சேர்ந்த வர்த்தமான் ஜெயின், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறைகளில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஆவார்.

சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் படித்த அவர், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

டெல் நிறுவனத்தின் பி.பி.ஓ. பிரிவில் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், பின்னர் தனது சொந்தத் தொழில் நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளார்.

ஆக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் துணைத் தலைவராகவும், ஆசியா இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.

தனது தொழில் வளர்ச்சியின் மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை ஆன்மிகம் மற்றும் சமூக நலப் பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் காணிக்கையை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே பல கோடி ரூபாய் நன்கொடைகள்!


வர்த்தமான் ஜெயின் 2019ஆம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல்வேறு உதவிகளையும் காணிக்கைகளையும் வழங்கி வருகிறார்.

திருப்பதி பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக மின்சாரப் பேருந்துகளையும், ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனல் மேம்பாட்டிற்காக ரூ.7 கோடியையும் வழங்கியுள்ளார்.

தேவஸ்தான கோசாலையில் கால்நடைகளுக்கான தீவனக் கலவை ஆலை அமைக்க ரூ.5 கோடியும், உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ணுவதற்கான இயந்திரம் வாங்க ரூ.1 கோடியும் வழங்கியுள்ளார்.

மேலும், கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

நாளை ஏழுமலையானுக்கு அணிவிப்பு!
தற்போது காணிக்கையாக வழங்கப்பட்டுள்ள 121 கிலோ தங்க ஆபரணங்கள் தேவஸ்தானத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் அபிஷேகத்திற்குப் பிறகு, புதிய ஆபரணங்களைக் கொண்டு ஏழுமலையானுக்கு அலங்காரம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம், வைரம், வைடூரியம் எனப் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் ஏழுமலையானுக்கு, ஒரே பக்தர் 121 கிலோ தங்கத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியிருப்பது பக்தர்களிடையே பெரும் வியப்பையும் ஆன்மிகப் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது வாழ்க்கையில் கிடைத்த வெற்றியை இறைவனுக்கு நன்றிக்கடனாகச் சமர்ப்பித்துள்ள வர்த்தமான் ஜெயினின் இந்தக் காணிக்கை, திருமலை ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.