நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய புதிய ஆராய்ச்சி முயற்சி – மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தகவல்! இந்தியாவிலேயே முதல் முறையாக சிஎம்சி மருத்துவமனையில் வளர்ச்சிதை ஆய்வகம் அமைப்பு!
செய்தி: ஜி. குலசேகரன்
வேலூர்: இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன மனித வளர்சிதை மாற்ற ஆய்வகம் (Human Metabolic Research Laboratory) வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி.) மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research) இணைந்து அமைத்துள்ள இந்த ஆய்வகத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா திறந்து வைத்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய்கள் உள்ளிட்ட வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவற்றால் ஏற்படும் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளைத் தடுப்பதற்கான மருத்துவ ஆராய்ச்சியில் இந்த ஆய்வகம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோய்கள் முற்றிய பிறகு சிகிச்சை அளிப்பதைவிட ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம்!
ஆய்வகத் திறப்பு விழாவில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, வளர்சிதை மாற்றக் கோளாறுகள் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம் என்றார்.
இந்தியாவில் ஒருபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்ந்து காணப்படும் நிலையில், மறுபுறம் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் உடல் பருமன் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
உணவுப் பழக்கத்திற்கும் ரத்தசோகைக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் விரிவான மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், உணவில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை இணைத்து ஆராய்ச்சிக் கூட்டமைப்பு!
இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சியை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், நாடு முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைத்து ஆராய்ச்சிக் கூட்டமைப்பு உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் இணைந்து தொற்றா நோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் அவற்றுக்கான தடுப்பு முறைகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
ஆஷா பணியாளர்கள் மூலம் கிராமப்புற மக்களின் உடல்நலக் கண்காணிப்பு!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொற்றா நோய்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் பணிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அளவில் விரிவுபடுத்தப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
இதற்காக ஆஷா (ASHA) பணியாளர்கள் மூலம் மக்களின் உடல்நல மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்படும்.
பின்னர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மற்றும் உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
140 கோடி மக்களுக்கான சுகாதாரச் சவால்!
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் தொற்றா நோய்கள் மிகப்பெரிய சுகாதாரச் சவாலாக உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2080-ஆம் ஆண்டு வரையிலும் நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு எதிராக இந்திய மருத்துவத்துறை தொடர்ந்து போராட வேண்டியிருக்கும் என்றார்.
எனவே, நோய்கள் முற்றிய பின்னர் சிகிச்சை பெறுவதைவிட, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவே நோய்களைக் கண்டறிந்து தடுப்பதே எதிர்கால சுகாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மருத்துவச் சாதனைகளில் சி.எம்.சி.யின் பங்களிப்பு!
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை இந்திய மருத்துவத்துறையில் பல்வேறு முக்கியச் சாதனைகளைப் படைத்துள்ளதாகக் குறிப்பிட்ட மத்திய சுகாதாரத்துறை செயலாளர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை மற்றும் தொழுநோய் தொடர்பான அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவத் துறைகளில் சி.எம்.சி. மருத்துவமனை முன்னோடிப் பணிகளை மேற்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள மனித வளர்சிதை மாற்ற ஆய்வகம் மருத்துவ ஆராய்ச்சிக்கும், எதிர்கால நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆரோக்கியமான இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சி.எம்.சி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ், மருத்துவ விஞ்ஞானி நிகில் தாமஸ், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிக்கும், தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்குமான புதிய முயற்சியாக வேலூர் சி.எம்.சி.யில் தொடங்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஆய்வகம் மருத்துவத்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

admin
