. பாட்டியையும் விட்டு வைக்காத கொடூரம்! அதிகாலையில் தாக்கி தாலி பறிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைது!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் அருகே அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 61 வயது மூதாட்டியை சரமாரியாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த தாலியைப் பறிக்க முயன்ற கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியைப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ராவத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜின் மனைவி சரஸ்வதி (61).
இவர் கடந்த 4-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சரஸ்வதியை சரமாரியாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த தாலியைப் பறிக்க முயன்றுள்ளார்.
இதில் மூதாட்டியின் பல் உடைந்ததுடன், கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது கணவர் கோவிந்தராஜ், மனைவியை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார
இதற்கிடையே தாலியைப் பறிக்க முயன்ற நபர், இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர், 100-க்கும் மேற்பட்ட கேமராக்களின் காட்சிகளைச் சரிபார்த்து, டியோ ஸ்கூட்டரில் சென்ற நபரை அடையாளம் கண்டனர்.
தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்ததில், ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமாரின் மகன் கேசவன் (21) என்பதும், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயோடெக்னாலஜி மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
அப்படி இருக்க அவர்,மூதாட்டியிடம் தாலியைப் பறிக்க முயன்றதை அவர் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் பயன்படுத்திய டியோ ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்த போலீசார், கேசவனை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிகாலை நேரத்தில் தனியாகச் சென்ற மூதாட்டியைத் தாக்கி தாலியைப் பறிக்க முயன்ற சம்பவமும், அதில் தொடர்புடைய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டதும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

admin
