“உங்கள் குடும்பத்தையே கொன்று விடுவோம்!” – துணை சபாநாயகர் தாக்குதல் விவகாரத்தில் திடீர் திருப்பம்! புகார் தெரிவித்த நபர் திடீர் பல்டி – பின்னணி என்ன?
செய்தி: வை. கதிரவன்,
தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர், பொதுமக்கள் குறைதீர்க்கச் சென்ற நபரைத் தாக்கியதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தனது பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குப்பைகள் அகற்றப்படாதது குறித்து புகார் தெரிவிக்கச் சென்றபோது துணைத் தலைவர் ரவிசங்கரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்பட்ட கார்த்திக் குமார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது துணைத் தலைவர் ரவிசங்கருடன் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள கார்த்திக் குமார், அங்கு கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு மட்டுமே ஏற்பட்டதாகவும், பெரிய அளவில் எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் சம்பவம் தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
துணைத் தலைவருடன் ஒரே கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அவர் தேர்தலில் போட்டியிட்டபோது தாம் பணியாற்றியதாகவும் கார்த்திக் குமார் கூறியுள்ளார்.
ஆனால், முதலில் வெளியான வீடியோவுக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள விளக்க வீடியோவுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, செய்தி நிறுவனங்கள் பல வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள “உங்கள் குடும்பத்தையே கொன்று விடுவோம்” என்ற மிரட்டல் குற்றச்சாட்டு இந்த விவகாரத்தின் பின்னணியில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதலில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், பின்னர் தாக்குதல் நடைபெறவில்லை என்ற விளக்கமாக மாறியது ஏன்? மிரட்டல் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை என்ன? சம்பவத்தின் முழுமையான பின்னணி விசாரிக்கப்படுமா?
அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண வேண்டுமே தவிர, புகார் தெரிவிக்க வருபவர்கள் அச்சப்படும் சூழல் உருவாகக் கூடாது.
அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வராமல், உண்மை நிலையை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
