ஆட்சியர் லீலா அலெக்ஸ் அதிரடி!45 ஆண்டுகளாக நிலம் திரும்பக் கோரும் விவசாயிகள்: 28-வது நாள் உண்ணாவிரதத்தில் ஆய்வு!

ஆட்சியர் லீலா அலெக்ஸ் அதிரடி!45 ஆண்டுகளாக நிலம் திரும்பக் கோரும் விவசாயிகள்: 28-வது நாள் உண்ணாவிரதத்தில் ஆய்வு!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சத்துவாச்சாரிக்கு அருகிலுள்ள அலமேலு ரங்காபுரம் பகுதியில், நடைபாறை கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டதாக நில உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான இழப்பீட்டுத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டிருந்தாலும், பலர் அந்தப் பணத்தைப் பெறாமல் தங்களது நிலத்தைத் திரும்ப வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ள நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறும் உரிமையாளர்கள், தங்களுக்கு பணம் வேண்டாம்; நிலமே வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏரியூர் மெயின் ரோடு பகுதியில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்று 28-வது நாளை எட்டியது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அதிகாரிகளுடன் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.

கிராமப் பகுதிகளில் நடந்து சென்று நிலைமையைப் பார்வையிட்ட அவர், இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

28 நாட்களாக இரவும் பகலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நில உரிமையாளர்களுக்கு, ஆட்சியரின் வருகையும் ஆய்வும் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலங்களைத் திரும்ப வழங்குவது தொடர்பாக அரசு விரைவில் உரிய முடிவெடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

குறிப்பு: இந்தப் போராட்டத்தின் போது எங்கள் முதல்வரே,உங்களை நம்புகிறோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயின் ஸ்டேண்டிங் போட்டோ அங்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்