தமிழக எதிர் கட்சிகளின் நவம்பர் திட்டம்! தவெக வின் புதிய கூட்டணி கணக்கா? வேலுமணி, ஓபிஎஸ், அரசியல் வட்டாரத்தில் பரபரப்புப் பேச்சு!

தமிழக எதிர் கட்சிகளின் நவம்பர் திட்டம்! தவெக வின் புதிய கூட்டணி கணக்கா? வேலுமணி, ஓபிஎஸ், அரசியல் வட்டாரத்தில் பரபரப்புப் பேச்சு!

செய்தி: ம.பா.கெஜராஜ்,

சென்னை:30,தமிழக அரசியலில் நவம்பர் 10 முதல் 15ஆம் தேதிக்குள் முக்கியமான அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தத் திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  இந்த தில்லாலங்கடி திட்டத்தை புரிந்து கொண்டிருக்கும் தவெக மிக மிக முக்கியமான மற்றும் அறிவுபூர்வமான நடவடிக்கைகளை கையில் எடுத்து நடைமுறைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் மூலம் எதிர்கட்சிகளின் திட்டத்தை தவிடுபொடியாக்க முற்பட்டிருக்கிறதாம்.

அதிமுகவில் வேலுமணி தலைமை ஏற்கிறாரா?

இந்த அரசியல் நகர்வுக்கான திட்டத்தை முறியடிக்கும் விதமாக அதிமுகவின் அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிமுக பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்படலாம் என்றும், கட்சியிலிருந்து வெளியேறிய தலைவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவுக்கே திரும்புவார்கள், அப்படி நடந்தால் அதிமுக தவெக கூட்டணி காணும் என்று கூறப்படுகிறது.

 அப்படி நடந்துவிட்டால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியப் பொறுப்பு அல்லது துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு, புதிய அரசியல் ஏற்பாடு உருவாக்கப்படலாம் என்ற தகவல்கள் உலா வருகின்றன.

விசிக - பாமக விவகாரத்தில் புதிய சமரசமா?

தவெக தலைமையிலான அரசியல் அணியில் பாமக இடம்பெற்றால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக வெளியேறலாம் என்ற பேச்சு ஏற்கெனவே நிலவி வந்தது.

ஆனால், பாமக ஒரு பக்கம், விசிக மற்றொரு பக்கம் என இரு கட்சிகளையும் ஒரே அரசியல் கூட்டணியில் தொடரச் செய்வதற்கான சமரச முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தவெக தலைமை எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பது தமிழக அரசியலில் கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது.

அதிமுக - தவெக நேரடிக் கூட்டணியா?

அதிமுகவின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டால், அதிமுகவும் தவெகவும் நேரடியாகக் கூட்டணி அமைத்து பயணிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு தரப்பினர் கணித்துள்ளனர்.

  இதன் மூலம் தற்போதைய அரசுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

   காங்கிரஸ் ஏற்கெனவே தவெக தலைமையிலான அரசுடன் இணைந்துள்ள நிலையில், அதிமுகவும் அந்த அணியில் இணைந்தால் தமிழகத்தின் அரசியல் கூட்டணி கணக்குகள் முற்றிலும் மாறக்கூடும்.

சட்டமன்றத்தில் தற்போதைய பலம் என்ன?

  234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், அக்டோபர் 9ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிகளின் பலம் பின்வருமாறு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் - 109

திமுக - 59

அதிமுக - 41

காங்கிரஸ் - 5

பாமக - 4

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2

பாஜக -1

தேமுதிக - 1

அமமுக - 1

மேலும் ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளன.

முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்து திருச்சி கிழக்கு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 107 ஆகக் குறைந்தது.

  பின்னர்தாராபுரம்,, மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றதால் அதன் பலம் 109 ஆக உயர்ந்தது. இந்த இரண்டு வெற்றிகளும் ஆட்சிக்கு அரசியல் ரீதியாக கூடுதல் பலத்தை அளித்துள்ளன.

234 உறுப்பினர்களைக் கொண்ட முழுமையான சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 118. தற்போது ஐந்து இடங்கள் காலியாக இருப்பதால், அவற்றையும் கணக்கில் கொண்டு சட்டமன்றத்தின் நடைமுறை பலத்தையும் பெரும்பான்மைக் கணக்கையும் கவனிக்க வேண்டியுள்ளது.

திமுகவின் எதிர்காலம் என்ன?

ஒருபுறம் திமுக சட்டமன்றத்தில் 59 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. மறுபுறம், காங்கிரஸ் உள்ளிட்ட முன்னாள் கூட்டணிக் கட்சிகள் தவெக அணியில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் அதிமுகவும் தவெகவுடன் இணைந்து பயணிக்கும் சூழல் உருவானால், தமிழக அரசியலில் திமுகவைச் சுற்றியிருந்த பழைய கூட்டணி அரசியல் கணக்குகள் முற்றிலும் மாறக்கூடும்.

முன்னாள் ஆட்சியாளர்கள் மீதான வழக்குகள், விசாரணைகள், அரசியல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் புதிய அரசியல் அணிகள் உருவாகும் சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்படுகின்றன.

  இதற்கிடையே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எக்ஸ் அமைச்சர் உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்கள் தவெகவில் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நவம்பர் மாதம் தமிழக அரசியலுக்கு முக்கியமான மாதமாக அமையுமா?

எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமா? அதிமுகவில் தலைமை மாற்றம் ஏற்படுமா? ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைவார்களா? அதிமுகவும் தவெகவும் நேரடிக் கூட்டணி அமைக்குமா? விசிக - பாமக இடையிலான முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

இத்தனை கேள்விகளுக்கும் நவம்பர் மாத அரசியல் நகர்வுகள்தான் பதில் சொல்ல வேண்டும்.