காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு!
செய்தி:ஜி.சாந்தகுமார்,
சென்னை:28, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டபோது, காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
அன்பில் மகேஷை விசாரணைக்காகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தபோது, அவரைச் சந்திக்கவும் உள்ளே செல்லவும் அனுமதி கோரி சேகர்பாபு, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது காவல் ஆய்வாளரை ஒருமையில் அழைத்துப் பேசியதுடன், காவல்துறையினரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சேகர்பாபு, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் மீது அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் முழுப் பின்னணி மற்றும் விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

admin
