கம்பீர அணிவகுப்பு... பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர் விஜய்! பணியில் இணைந்த 25 புதிய டி.எஸ்.பி.க்கள்

கம்பீர அணிவகுப்பு... பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர் விஜய்! பணியில் இணைந்த 25 புதிய டி.எஸ்.பி.க்கள்

செய்தி: ம.பா. கெஜராஜ்,
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் (டிஎஸ்பி) பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி நிறைவு செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, பயிற்சிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

2025-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த மொத்தம் 25 டி.எஸ்.பி.க்கள் தங்களது பயிற்சியை நிறைவு செய்து தமிழக காவல்துறையில் பணியில் இணைய உள்ளனர். இவர்களில் 11 பேர் பெண் டி.எஸ்.பி.க்கள்; 14 பேர் ஆண் டி.எஸ்.பி.க்கள் ஆவர்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களைத் தடுப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை மேற்கொள்ள உள்ள புதிய காவல் அதிகாரிகளுக்கு விழாவில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.