மருத்துவர் ராமதாஸின் பின்னணியில் மகள் புதிய கட்சி துவக்கமா?!

மருத்துவர் ராமதாஸின் பின்னணியில் மகள் புதிய கட்சி துவக்கமா?!

செய்தி: ம.பா. கெஜராஜ்,
பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட தலைமைப் போட்டி மற்றும் கட்சிப் பிளவுக்குப் பிறகு, அரசியல் களத்தில் அதிகம் வெளிப்படாமல் இருந்த மருத்துவர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி தற்போது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்.

வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் தனது புதிய அரசியல் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியை நடத்த ஸ்ரீகாந்தி திட்டமிட்டுள்ளார்.

இதற்கான அழைப்பையும் தனது ஆதரவாளர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு விடுத்துள்ளார்.

தந்தையின் கொள்கைகள் வழிகாட்டும்!

ஸ்ரீகாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மக்கள் நலன் ஆகிய கொள்கைகளைத் தனது வாழ்நாள் லட்சியங்களாகக் கொண்டு பயணித்த மருத்துவர் ராமதாஸின் வழிகாட்டுதலும், அவர் கற்றுத்தந்த கொள்கைகளும் தொடர்ந்து தனக்குத் துணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் புதிய அரசியல் பயணம் தனது தனிப்பட்ட பயணம் மட்டுமல்ல; அனைவருக்குமான பயணம் என்றும், கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு புதிய நம்பிக்கையுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ராமதாஸ் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி!

பா.ம.க.வில் ஏற்பட்ட தந்தை–மகன் மோதலின்போது ஸ்ரீகாந்தி தனது தந்தை மருத்துவர் ராமதாஸுக்கு ஆதரவாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

பின்னர் கட்சியின் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கும் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் ராமதாஸின் ஆதரவாளர்கள், பா.ம.க.வில் இருந்து விலகியவர்கள் மற்றும் நீண்டகாலமாக அரசியலில் ஒதுங்கியிருக்கும் முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஸ்ரீகாந்தி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் புதிய அரசியல் முயற்சிக்கு மருத்துவர் ராமதாஸின் வழிகாட்டுதலும் ஆதரவும் பின்னணியில் இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதனால், இந்த இயக்கம் பா.ம.க.வின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிசம்பர் 6-ல் என்ன அறிவிப்பு வெளியாகும்?

புதிய இயக்கத்தின் பெயர், கொடி, நிர்வாகிகள், கொள்கைத் திட்டங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்புகள் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே தந்தை–மகன் மோதலால் தமிழக அரசியலில் கவனம் பெற்ற பா.ம.க. குடும்பத்தில், தற்போது மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் புதிய அரசியல் பிரவேசம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.