சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்த நூல்! டெல்லியில் . நடைபெற்ற ‘Belonging: A Journey of Love’ வெளியீட்டு விழா – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு!
செய்தி: நரேஷ்.என்,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ நூலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா புதுடெல்லியில் இன்று (நவம்பர் 16) சிறப்பாக நடைபெற்றது.
டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
544 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில், இத்தாலியில் தனது குழந்தைப் பருவ வாழ்க்கை, ராஜீவ் காந்தியுடனான சந்திப்பு மற்றும் திருமணம், இந்தியாவுக்கு வந்த பின்னரான வாழ்க்கை,
இந்திரா காந்தி குடும்பத்துடனான உறவு, ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரான துயரங்கள், இந்திய அரசியலில் தனது பயணம் எனப் பல்வேறு அனுபவங்களை சோனியா காந்தி பதிவு செய்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு, 2004ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்க மறுத்த முடிவு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் கால அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கியமான அரசியல் அனுபவங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
M

அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்திய நூல்!
இந்த நூலில் இடம்பெற்றுள்ள அவசரநிலைப் பிரகடனம், 1984 சீக்கியர் படுகொலைகள் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகள் குறித்த சோனியா காந்தியின் கருத்துகள் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாஜக தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் நூலின் உள்ளடக்கத்தை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.
ஏற்கெனவே நவம்பர் 10ஆம் தேதி முதல் புத்தகம் விற்பனைக்கு வந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சி அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவாக நடைபெற்றது.
தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும், இந்திய அரசியலில் பல தசாப்தங்களாகத் தான் கண்ட நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து சோனியா காந்தி எழுதியுள்ள இந்த நூல், அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

admin
