பெண் இன்ஸ்பெக்டர்கள் செய்த தில்லாலங்கடி! போலி போக்சோ வழக்கால் தூக்கி அடித்த அதிகாரிகள்!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
தமிழகத்தில் பெண்கள் காவல் நிலையங்களில் பணியாற்றிய இரண்டு பெண் காவல் ஆய்வாளர்கள் மீது வெவ்வேறு புகார்களின் அடிப்படையில் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் பிரவீனாவுக்கு கட்டாயப் பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்தராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் புகார் அளிக்கச் சென்றபோது, குளத்தூர் காவல் நிலையத்திற்கும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டதாகவும், புகாரை உரிய முறையில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் அப்போது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், புகாரைப் பெறுவதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் காட்டப்பட்டதாகக் கூறப்படும் அலட்சியம் தொடர்பாக, நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு அவருக்கு கட்டாயப் பணி ஓய்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பொய் போக்சோ வழக்கு; ரூ.5.50 லட்சம் லஞ்சப் புகார்!
மற்றொரு சம்பவமாக, சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்தராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெய்வேலியைச் சேர்ந்த சுரேஷ் கண்ணா என்பவர் திருமணத் தகவல் இணையதளம் மூலம் அறிமுகமான பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுத்ததால், அவரையும் அவரது சகோதரரையும் பழிவாங்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அந்தப் பெண்ணின் சகோதரரான 23 வயது இளைஞரைப் போக்சோ வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டு, சிறுமி ஒருவரை பயன்படுத்தி புகார் அளிக்கச் செய்ததாகவும், இந்தப் பொய்யான வழக்கைப் பதிவு செய்ய காவலர் வசந்தராஜா வழியாக ஆய்வாளர் விஜயலட்சுமிக்கு ரூ.5.50 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக நெய்வேலி போலீசார் சுரேஷ் கண்ணாவைக் கைது செய்து விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்தராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் நிலையங்களிலேயே அலட்சியம், பொய்வழக்கு மற்றும் லஞ்சப் புகார் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

admin
