அரசுப் பள்ளி மாணவர்களின் இலவசப் பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்ட தலைமை ஆசிரியை!அதிரடி பணியிடை நீக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களின் இலவசப் பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்ட தலைமை ஆசிரியை!அதிரடி பணியிடை நீக்கம்

செய்தி: ம.பா. கெஜராஜ்,
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரசு இலவசமாக வழங்கும் பாடப்புத்தகங்களையே பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டு விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல் பருவத் தேர்வு முடிவடைந்து இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, முதல் பருவத்திற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பாடப்புத்தகங்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா மாணவர்களிடமிருந்து திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அந்தப் புத்தகங்களை மூட்டை மூட்டையாகக் கட்டி, பழைய பேப்பர் வியாபாரியைப் பள்ளிக்கு வரவழைத்து எடைக்குப் போட்டு விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது.

அரசின் இலவசப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்கு எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, பள்ளியில் பழைய புத்தகங்கள் அதிகமாகத் தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், அதனைத் தடுக்கும் நோக்கத்திலேயே புத்தகங்களை அகற்றி விற்பனை செய்ததாகவும் தலைமை ஆசிரியை விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, தலைமை ஆசிரியை மஞ்சுளா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசு பல கோடி ரூபாய் செலவிட்டு இலவசப் பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது.

அத்தகைய புத்தகங்களை மாணவர்களிடமிருந்து திரும்பப் பெற்று எடைக்குப் போட்டு விற்பனை செய்ததாக எழுந்துள்ள புகார் கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டுமென்றால் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதும், சுகாதார நடவடிக்கைகளை எடுப்பதும்தானே முறையான நடவடிக்கை? அதற்காக மாணவர்களின் பாடப்புத்தகங்களை விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்?

இந்தச் சம்பவத்தில் விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, கிடைத்த தொகை, அந்தத் தொகை எங்கு செலுத்தப்பட்டது, இதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா என்பன உள்ளிட்ட விவரங்களையும் கல்வித்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் இலவச நலத்திட்டப் பொருட்கள் முறையாக மாணவர்களையே சென்றடைகின்றனவா என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.