அரக்கோணத்தில் நள்ளிரவில் மர்மக் கும்பல் அட்டூழியம்! தீரன் பட பாணியில் வீடு புகுந்து கொள்ளை... 45 சவரன் நகைகள் அபேஸ்!

அரக்கோணத்தில் நள்ளிரவில் மர்மக் கும்பல் அட்டூழியம்! தீரன் பட பாணியில் வீடு புகுந்து கொள்ளை... 45 சவரன் நகைகள் அபேஸ்!

செய்தி: கு. அசோக்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்மக் கும்பல் நடத்திய துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள், 45 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அன்வார்திக்கான்பேட்டை பகுதியில் ஸ்டீல் வெல்டிங் தொழில் செய்து வரும் ரஹ்மத்துல்லா என்பவரது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.

இதோடு கொள்ளையர்களின் அட்டூழியம் நிற்கவில்லை. அதே பகுதியில் மூர்த்தி மற்றும் கட்டிடத் தொழிலாளி வெங்கடேசன் ஆகியோரது வீடுகளிலும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது வீட்டில் ஆட்கள் இருப்பதை அறிந்த கொள்ளையர்கள், வெளியே வந்தால் வெட்டிவிடுவதாக மிரட்டி அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்தவர்கள் வெளியே வராமல் இருந்த நிலையில், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளைக் குறிவைத்து, ஆட்கள் இருந்த வீடுகளிலும் மிரட்டல் விடுத்துச் சென்ற மர்மக் கும்பலின் செயல்பாடு, பிரபலமான 'தீரன்' திரைப்படத்தில் வரும் கொள்ளைச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சம்பவம் குறித்து கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.