ஆதரவற்ற பெண்ணிடம் நகைகளை ஆட்டையை போட்ட நிதி நிறுவன ஊழியர்கள்! நடவடிக்கை எடுக்க தடை போட்ட போலீஸ் அலுவலர்! எஸ்பி உத்தரவின் பேரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு!

ஆதரவற்ற பெண்ணிடம் நகைகளை ஆட்டையை போட்ட நிதி நிறுவன ஊழியர்கள்! நடவடிக்கை எடுக்க தடை போட்ட போலீஸ் அலுவலர்!  எஸ்பி உத்தரவின் பேரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு!

செய்தி: ம.பா. கெஜராஜ்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய ஆதிதிராவிடர் பெண் ஒருவரிடம் ரூ.30 லட்சம் பணம் மற்றும் 860 கிராம் தங்க நகைகளைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்ததாகவும், பணம் மற்றும் நகைகளைக் கேட்டபோது சாதிப் பெயரைக் கூறி இழிவுபடுத்தியதாகவும் எழுந்த புகாரில், நான்கு பேர் மீது க நகர காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகைக்கடன் மேலாளராகப் பணியாற்றிய தமிழரசி (47) என்பவர் அளித்த புகாரில், தனது குடும்பச் சூழ்நிலையை அறிந்திருந்த நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள், தணிக்கை தொடர்பான பிரச்சினையைச் சரிசெய்வதாகக் கூறிதன்னிடமிருந்த வீட்டு நகைகள், உறவினர்களின் நகைகள் என மொத்தம் 860 கிராம் தங்க நகைகளையும், வெளியில் கடன் வாங்கி திரட்டிய ரூ.30 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தணிக்கை முடிந்ததும் பணத்தையும் நகைகளையும் திருப்பித் தருவதாகக் கூறி அவற்றைப் பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் திருப்பிக் கேட்டபோது இழுத்தடித்ததுடன், மாதேஷ் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் தன்னைத் தனியாக அழைத்து சாதிப் பெயரைக் கூறியும், பெண் என்பதைக் குறிப்பிட்டும் இழிவாகப் பேசியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குழந்தை மற்றும் தந்தையை வைத்து மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், DVR பெட்டியை மாற்றி கேமரா வேலை செய்யவில்லை எனக் கூறி ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் தமிழரசி புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மாதேஷ், கோவிந்தசாமி, செல்வகணபதி, சுந்தரேசன் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதிப் பெயரைக் கூறி இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக, எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை கோரப்பட்டது.

ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பலமுறை காவல் நிலையத்திற்குச் சென்றும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் தமிழரசி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், முன்னாள் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி தேவன் என்பவர் விசாரணையில் தலையிட்டு தடுப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண்ணின் வாழ்வாதாரத்தையும் குடும்பப் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் இவ்வளவு பெரிய தொகையும் நகைகளும் மோசடி செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி விசாரணை நடத்தி, பணம் மற்றும் நகைகளை மீட்பதுடன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தான் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.