எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கினார்! கதாநாயகி யார்?

க.ராகவா முகில்,
எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும், அவரது கனவுப்படமான "கில்லர்" படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் நடிகராக கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக எப்போது படம் தருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் மீண்டும் இயக்குனராக களமிறங்கும் "கில்லர்" படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித்தின் 'வாலி' படம் மூலம் திரையுலகில் இயக்குநராக கால் பதித்த எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.
இரண்டாவது படமான விஜய் நடித்த 'குஷி' பட வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. பான் இந்தியா என்ற சொல் அறிமுகமாகும் முன்னரே இந்தியா முழுக்க பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது.
இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, "நியூ" படத்தில் நடிகராகவும் களமிறங்கி திரையுலகை வியப்பில் ஆழ்த்தினார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து பல விதமான பாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவந்திழுத்தார்.
'நியூ' படத்தை இயக்கிய அதே எனர்ஜியோடு திரும்பி வந்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. எண்டர்டெயின்மெண்ட்.. கமர்சியல்.. லவ்.. டிராமா.. விறுப்பான ஆக்சன் காட்சி என்று டிரீம் புராஜக்டாக தயாராகிறது. பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா குறிப்பிடும் போது, "என்னுடைய கனவு இடமான 'இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர்' (கலைத்துறையில் மட்டும்) என்ற இடத்தை அடைவதற்கு,
முதல் பட இயக்குநர் போல, முதல் பட நடிகன் போல மிக சிரத்தையோடு, உங்கள் துணையோடு களமிறங்கி இருக்கிறேன்.
"கில்லர்" எனது கனவுப்படம். சில வருடங்களாகவே எழுதி வந்தேன். இது மக்களை 'குஷி' படுத்த போற படம். இப்படத்தை தென்னிந்தியாவின் மிகப்பெரிய பட நிறுவனமான ஷ்ரீ கோகுலம் மூவிஸ் 'கோகுலம்' கோபாலன் அவர்களோடு இணைந்து, ஏஞ்சல் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக உருவாக்குவதில் பெருமைக் கொள்கிறேன்" என்றார்.
இதன் படப்பிடிப்பு ஜீன் 27ம் தேதி பூஜையுடன் இனிதே துவங்கியது. ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும், மேலும் சில முக்கியமான காட்சிகள் மெக்ஸிகோ நாட்டிலும் படமாக்கப்படுகிறது. இப்படத்தின் நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் அடுததுத்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.