காஞ்சிபுரம் கிளைச் சிறையில் முறைகேடுகளா? பணம் கொடுத்தால் எல்லாம் கிடைக்கும்! விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் கைதிகள் தப்பிச் செல்வது, முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எழுவது போன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், காஞ்சிபுரம் கிளைச் சிறையிலும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிறிய குற்றங்களில் தொடர்புடையவர்களை அடைத்து வைப்பதற்கான கிளைச் சிறையில், பணம் பெற்றுக்கொண்டு கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களையும் தங்கவைத்து பாதுகாப்பதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைதிகளுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை மூன்று வேளையும் வழங்க அனுமதிப்பதற்கு ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.1,000 வரை வசூலிக்கப்படுவதாகவும், படுக்கை விரிப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கும் தனியாகக் கட்டணம் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய வசதிகளுக்காக நாளொன்றுக்கு சுமார் ரூ.50,000 வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்படுவதாகவும், கீழ்நிலை ஊழியர்கள் முதல் சப்-ஜெயில் வார்டன் வரையிலான சிலர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கைதிகள் இருந்தால், அவர்களைப் பாதுகாப்பு அதிகமுள்ள வேலூர் அல்லது புழல் உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றுவது குறித்தும், கிளைச் சிறையின் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்து கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்படுகிறது.
புகார்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

admin
