பிரேசிலை வீட்டுக்கு விரட்டிய நார்வே! கண்ணீருடன் ஓய்வு பெற்ற நெய்மர்!
ஜி.எஸ்.மேத்யூராஜ்,
ஐந்து முறை கால்பந்து உலக கோப்பையை வென்ற பிரேசிலின் 6-வது உலகக் கோப்பை சாம்பியன் கனவை நார்வே தகர்த்தது. இதில் தோலிவியுற்ற பிரேசில், தன்னுடைய நடசித்திர வீரர் நெய்மாரையும் இழந்தது. ஆம் அவர் கண்ணீருடன் தனது ஓய்வை அறிவித்தார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோபைக்கான கால்பந்து போட்டியில் சிறிய பல நாட்டின் டீம்கள் அசத்தி வருகின்றன. ஏற்கனவே பெரிய ஜாம்பாவான்களாக கருதப்பட்ட ஜெர்மனி டீமை இக்குவாடார் டீம் வீட்டுக்கு அனுப்பிவைத்தது. அந்த வரிசையில் பிரேசிலும் இடம்பிடித்து கால் பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் இந்த 2 கோல்களும் சூப்பர் ஸ்டார் ஹாலண்டின் 6 மற்றும் 7-வது கோல் ஆகும். எம்பாப்பே, மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு எந்த விதத்திலும் தான் சளைத்தவரல்ல என்கிறார் ஹாலண்ட்.
கடைசியில் தனது கடைசி உலகக் கோப்பையை ஆடும் நெய்மர் ஒரு பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி பிரேசிலுக்கு ஆறுதல் கோலை அடித்தார். ஆனால், அப்போதே பிரேசில் கதை முடிந்துவிட்டது. நெய்மரும் ஸ்டேடியத்தில் இருந்த பிரேசில் ரசிகர்களும் கண்ணீர் சிந்தினர்.
பிரேசிலின் துரதிருஷ்டமோ அல்லது நார்வே கோல் கீப்பர் ஆர்ஜன் நைலண்ட்டின் திறமையான கணிப்பா என்பதைக் கூறுவது கடினமாக இருந்தாலும் பிரேசில் ஸ்ட்ரைக்கர் புருனோ கிமாரேஸ் இடைவேளைக்கு முன்பே பெனால்டி கிக் வாய்ப்பை தத்தித் தத்தி ஓடி அடித்துக் கோட்டை விட்டதைத்தான் பிரேசில் உலகம் இன்று பேசப் போகிறது.
நைலண்ட் தடுத்து விட்டார். அவரை தவறான பக்கம் டைவ் அடிக்க வைத்து வேறொரு பக்கம் கோலில் அடிக்கத்தான் தத்தித் தத்தி ஓடி அடிப்பது என்பது வழக்கமாக இருந்தது, ஆனால், இம்முறை நார்வே கோல் கீப்பர் ஆர்ஜன் நைலண்ட் மிகத் துல்லியமாக டைவ் அடித்து கோலைத் தடுத்தார். அத்தோடு பிரேசில் ரசிகர்கள், வீரர்கள் மனங்களையும் உடைத்துப் போட்டார்.
ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் கூட ஆப்டா அனலிஸ்ட் பிரடிக்டர் 34% பிரேசிலுக்குத்தான் வாய்ப்பு என்று பறைசாற்றியது. ஆனால் கணிப்பானுக்குத் தெரிந்தது பிரேசிலுக்குத் தெரியவில்லையே!
போட்டியின் தொடக்கத்திலேயே நார்வே அதிரடி காட்டியது. மூன்றாவது நிமிடத்தில் மார்ட்டின் ஓடேகார்ட் வழங்கிய அற்புதமான பாஸை தொடர்ந்து ஜூலியன் ரையர்சன் உருவாக்கிய வாய்ப்பை பாட்ரிக் பெர்க் கோலாக மாற்றினார். எனினும், ரையர்சன் ஆஃப்சைடில் இருந்ததாக தீர்ப்பளிக்கப்பட்டதால் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது.
பெனால்டி வாய்ப்பைக் கோட்டை விட்ட பிரேசில்:
இதற்குப் பிறகு பிரேசிலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. மதேயூஸ் குன்ஹா மீது கிரிஸ்டோஃபர் அயர் செய்த தவறுக்காக வீடியோ உதவி நடுவர் பரிசீலனைக்குப் பிறகு பெனால்டி வழங்கப்பட்டது. ஆனால் பிரேசில் மிட்ஃபீல்டர் புரூனோ கிமாரேஸ் எடுத்த பலவீனமான ஷாட்டை நார்வே கோல்கீப்பர் ஆர்ஜன் நைலண்ட் அபாரமாக தடுத்து நிறுத்தினார்.
முதல் பாதியின் மீதமுள்ள நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கின. வினிஷியஸ் ஜூனியர் மற்றும் கப்ரியல் மார்டினெல்லியின் முயற்சிகளை நார்வே கோல்கீப்பர் தடுத்தார். மறுமுனையில் ஓடேகார்டின் முயற்சியை பிரேசில் கோல்கீப்பர் அலிசன் தடுத்தார்.
இடைவேளையில் நார்வே பயிற்சியாளர் ஸ்டேல் சோல்பாக்கன் மேற்கொண்ட இரட்டை மாற்றம் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. ஆண்ட்ரியாஸ் ஷெல்டெருப் மற்றும் ஆஸ்கர் பாப் களமிறங்கியதும் நார்வே தாக்குதல் ஆட்டம் வேகமடைந்தது.
அந்தக் கடைசி 11 நிமிடங்களும் பிரேசிலின் தவிப்பும்:
81-வது நிமிடத்தில் ஷெல்டெருப் வழங்கிய துல்லியமான கிராஸை ஹாலாந்து உயரமாக எழும்பி தலையால் முட்டி கோலாக மாற்றினார். கிளப் மட்டத்தில் தனது அணித் தோழரான கப்ரியல் மகல்யாஸை விடவும் உயரமாக எழும்பி தலையால் முட்டிய அந்த கோல் நார்வே ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
கூடுதல் நேரத்தில் மீண்டும் தாக்கிய ஹாலாண்ட், ஷெல்டெருப்பின் பாஸைப் பெற்று பாக்ஸின் விளிம்பிலிருந்து தாழ்வான ஷாட்டால் வலைக்குள் செலுத்தி 2-வது கோலை அடித்து பிரேசிலுக்கு ஆணியறைந்தார். அந்த கோலுடன் நார்வே 2-0 என முன்னிலை பெற்றது. தனது இரண்டாவது கோலுக்குப் பிறகு ஹாலாண்ட் அமைதியாக நின்று புன்னகையுடன் கொண்டாட, பின்னால் இருந்த நார்வே ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரேசில் பயிற்சியாளர் கார்லோ ஆன்செலொட்டி இரண்டாம் பாதியில் எண்ட்ரிக், நெய்மர் உள்ளிட்ட வீரர்களை களமிறக்கியபோதும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை. இருப்பினும், கூடுதல் நேரத்தின் இறுதியில் நெய்மர் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி கணக்கை 2-1 என குறைத்தார்.
ஆனால், அதற்கு மேல் பிரேசிலால் மீண்டு வர முடியவில்லை. ஹாலண்டின் இரட்டை கோல்களும், இடைவேளைக்குப் பிறகு நார்வே வெளிப்படுத்திய கட்டுப்பாடான ஆட்டமும், உலகக் கோப்பை அரங்கில் பிரேசிலின் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தன.
கண்ணீருடன் விடைபெற்ற நெய்மர்:
பிரேசில் கால்பந்தின் ஒரு பொற்காலம் முடிவுக்கு வந்தது. நியூ ஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் இறுதி விசில் ஒலித்ததும், பிரேசில் நட்சத்திர வீரர் நெயமர் கண்ணீருடன் மைதானத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அவரது சக வீரர்கள் அவரை ஆறுதல் கூறினர்.
"நான் இங்கேயே தொடங்கினேன்; இங்கேயே முடித்துவிட்டேன்" என்றார். 2010 ஆகஸ்டில், அமெரிக்காவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் இதே மெட்லைஃப் ஸ்டேடியத்தில் பிரேசில் அணிக்காக நெய்மர் அறிமுகமானார். அந்தப் போட்டியிலேயே அவர் தனது முதல் சர்வதேச கோலையும் பதிவு செய்தார்.
இப்போது, பிரேசில் தேசிய அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக தனது சர்வதேச கால்பந்து பயணத்தை நிறைவு செய்கிறார். நெய்மர் 80 கோல்கள் அடித்துள்ளார்; இது கால்பந்து ஜாம்பவான் பீலே அடித்த 77 கோல்களை விட மூன்று கோல்கள் அதிகமாகும். இந்நிலையில் நெய்மர் சர்வதேச போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை என்று தனது ஓய்வை அறிவித்தார்.

admin
