1903 பாலாற்றுப் பெருவெள்ளத்தின் 123-ஆம் ஆண்டு நினைவேந்தல்! மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் மௌன அஞ்சலி!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கடந்த 1903-ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் 123-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1903-ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பெருவெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 3,000-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் நினைவாக வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, 'பாலாற்றைப் பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் சி.எல். சாலை, உழவர் சந்தை வழியாகச் சென்று நினைவுச் சின்னத்தை அடைந்தனர்.
அங்கு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, 1903-ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் வரலாற்றுச் சம்பவங்களை விளக்கும் புத்தகம் பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினர் சாரதிகுமார், பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்பிரமணி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈசன் முருகசாமி, 1903-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வாணியம்பாடி பகுதியில் மட்டும் சுமார் 200 பேர் உயிரிழந்ததாகவும், அன்றைய காலகட்டத்தில் இப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பாலாற்றில் திடக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாலாறு – தென்பெண்ணை ஆறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுடன், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பாலாற்றைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
123 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெள்ளத்தின் நினைவுகளைப் பாதுகாப்பதுடன், மீண்டும் இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் இருக்க ஆற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி உணர்த்தியது.
குறிப்பு: அந்தப் பால் அட்டை தான் தோல் தொழிற்சாலை அதிபர்கள் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

admin
