தீபாவளி நாளில் தமிழகத்தில் தொடர்ந்த கொலைகள்! கடலூரில் போலீஸ் மீது கத்திக்குத்து முயற்சி – தேனியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை! காவல்துறைக்கே பாதுகாப்பில்லையா?!

தீபாவளி நாளில் தமிழகத்தில் தொடர்ந்த கொலைகள்! கடலூரில் போலீஸ் மீது கத்திக்குத்து முயற்சி – தேனியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை! காவல்துறைக்கே பாதுகாப்பில்லையா?!

செய்தி: ம.பா. கெஜராஜ்,
தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நவம்பர் 8ஆம் தேதி, மறுபுறம் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் தமிழகத்தில் பல கொலைகள் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியில் பிரிதிவிராஜ் என்ற ரவுடி, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் அருளரசு என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

அவர் எப்புத்தூர் பகுதியில் உள்ள முந்திரித் தோப்பில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று அவரைப் பிடிக்க முயன்றனர்.

அப்போது அருளரசு கத்தியால் காவல்துறையினரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அருளரசுவின் காலில் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த உதவி ஆய்வாளரும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளியும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் (57) உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அவர், தேனி டி.எஸ்.பி. அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்தார். தீபாவளி இரவில் சமதர்மபுரம் பகுதியில் சாலையின் குறுக்கே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களைக் கண்டித்துள்ளார்.

மேலும், அந்தச் சம்பவத்தை தனது செல்போனில் பதிவு செய்ய முயன்றபோது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதை ஒரு கோடி ரூபாயாக உழைத்து தர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்,

இதற்கிடையே, தீபாவளி நாளான நவம்பர் 8ஆம் தேதி திருச்சி, கடலூர், தேனி, சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர்.

சில ஊடகங்கள் 8 கொலைகள் என்றும், வேறு சில செய்திகள் 9 மற்றும் 11 கொலைகள் என்றும் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதால், இறுதி எண்ணிக்கையை காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையினருக்கே இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவது மிகவும் கவலைக்குரியதாகும்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் தாக்கப்படுவதும், உயிரிழப்பதும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மதுபோதையில் நடைபெறும் வன்முறைகள், முன்விரோதக் கொலைகள், பொது இடங்களில் அத்துமீறல்கள் ஆகியவற்றைத் தடுக்க காவல்துறை முன்கூட்டியே தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

காவல்துறையினரின் பாதுகாப்பு, பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் அரசு முதன்மையான பொறுப்பாகக் கருதி செயல்படுமா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக உள்ளதா என்பதை அரசு வெளிப்படையாக விளக்குமா? என்பதே தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.