அம்பலப்படுத்திய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமா? AI புத்தகங்கள் கொள்முதல் விவகாரம்: தி.மு.க. ஆட்சியில் நடந்ததாகக் குற்றச்சாட்டு –
செய்தி: ம.பா. கெஜராஜ்
கோவையில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் புத்தகங்கள், தவறான வரலாற்றுத் தகவல்கள், சந்தேகத்திற்குரிய ஆசிரியர்கள் மற்றும் பதிப்பகங்கள், புத்தகங்களின் உண்மையான விலையைவிட அதிக விலைக்கு கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
நூலகத்திற்காக வாங்கப்பட்ட புத்தகங்களை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, வரலாற்றில் இல்லாத நபர்களை வரலாற்று ஆளுமைகளாகச் சித்தரித்தல், தவறான வரலாற்றுக் குறிப்புகள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் உள்ளடக்கங்கள் போன்றவை இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சாதாரணமாக சில நூறு ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு வாங்கப்பட்டதாகவும், சரிபார்க்கப்படாத பதிப்பகங்களிடமிருந்து ஏராளமான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்ததுடன், புத்தகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையிலும் புகார் அளித்து, பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கப்பட்ட விவரங்களையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
கரூர் சம்பவம் உள்ளிட்ட கடந்த காலங்களில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களைப் பார்க்கும்போது, ஊழல் மற்றும் முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துபவர்களின் பாதுகாப்பு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.
இந்த விவகாரத்தில் பெருமாள் முருகனுக்கு இதுவரை குறிப்பிட்ட அச்சுறுத்தல் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லாவிட்டாலும், அவருடைய பாதுகாப்பு குறித்து காவல்துறையும் உளவுத்துறையும் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
எனவே, பெருமாள் முருகனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பதை அதிகாரிகள் மதிப்பீடு செய்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்மையை வெளிக்கொண்டு வரும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் புகார்தாரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும்.
மாணவர்கள் தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள நூலகங்களை நாடுகிறார்கள். அங்கு வைக்கப்படும் புத்தகங்களிலேயே போலியான தகவல்களையும், தவறான வரலாற்றையும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருப்பது காலக் கொடுமையாகும்.
அதற்குப் பொதுமக்களின் வரிப்பணத்தைச் செலவிட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டால், அது சாதாரண நிர்வாக முறைகேடு மட்டுமல்ல; அறிவைத் தேடிச் செல்லும் மாணவர்களையும் எதிர்காலத் தலைமுறையையும் ஏமாற்றும் நூதனமான திருட்டாகவே பார்க்கப்படும்.
இந்தப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது? யார் யாருக்குத் தொடர்பு உள்ளது? அரசுப் பணம் எவ்வளவு செலவிடப்பட்டது? புத்தகங்களைத் தேர்வு செய்தவர்கள் யார்? கொள்முதல் நடைமுறைகளில் விதிமீறல்கள் நடந்தனவா? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளிப்படையான விசாரணை மூலம் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
அதேபோல், இந்த விவகாரத்தைத் துணிச்சலுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் பாதுகாப்பையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
