ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்து… மறந்த விவசாயி! ஓராண்டுக்குப் பிறகு கிடைத்த பணத்தை கரையான்கள் ‘தின்ற’ சோகம்!
என்.நரேஷ்,
ஜெய்ப்பூர்: திருட்டு போய்விடக்கூடாது என்பதற்காக ரூ.5 லட்சம் பணத்தை வயலில் புதைத்து வைத்த விவசாயி, அந்தப் பணத்தை எங்கு புதைத்தார் என்பதை மறந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுக்குப் பிறகு பணம் கிடைத்தபோதும், கரையான்கள் நோட்டுகளை அரித்ததால் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் விவசாயி குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தை சுமார் ஓராண்டுக்கு முன்பு விற்றுள்ளார். அதன் மூலம் கிடைத்த ரூ.5 லட்சத்தை வைத்து வீடு கட்ட திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. பணம் திருடு போகலாம் அல்லது தேவையில்லாமல் செலவாகிவிடலாம் எனக் கருதிய அவர், அந்தப் பணத்தை பாலித்தீன் பையில் வைத்து வயலில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார்.
ஆனால், மது அருந்தும் பழக்கம் மற்றும் மறதி காரணமாக, பணத்தை எந்த இடத்தில் புதைத்தார் என்பது அவருக்கு நினைவில் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து வயலின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்தினர் குழி தோண்டி பணத்தை தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு வயலில் விதைப்பு பணிகளுக்காக நிலத்தை உழுதபோது, மண்ணுக்கு மேலே பாலித்தீன் பை ஒன்று தென்பட்டுள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது, தாங்கள் நீண்ட நாட்களாகத் தேடிய ரூ.5 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.
ஆனால், மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பணம் இருந்த நோட்டுகளை கரையான்கள் கடுமையாக அரித்திருந்ததால், அவை துண்டு துண்டாக சேதமடைந்திருந்தன.
இதையடுத்து விவசாயி குடும்பத்தினர் சேதமடைந்த நோட்டுகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குச் சென்றுள்ளனர். ஆனால், நோட்டுகள் மிகவும் மோசமாக சேதமடைந்திருந்ததால் அவற்றை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மாவட்ட தலைநகரில் உள்ள எஸ்பிஐ பிரதான கிளைக்கும் சென்று முயற்சி செய்துள்ளனர். அங்கும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது.
திருட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வயலில் புதைத்த பணம்… ஓராண்டுக்குப் பிறகு கிடைத்தும் கரையான்களின் தாக்குதலால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்ட சம்பவம் விவசாயி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

admin
