ஆசிரியர்களா? ரவுடிகளா? ஏழை மாணவனை விரட்டி அடிக்கும் கொடூரம்!
செய்தி: செ. காவியப் பிரியன்,
நாட்றம்பள்ளி:ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் படிப்பில் சற்று பின்தங்கியிருக்கிறார் என்பதற்காக, அவரை, சக மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து காலாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்காமல், பள்ளிக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் நாட்றம்பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் படிப்பில் சற்று பின்தங்கியிருப்பதாகக் கூறி, அவரை வகுப்பறைக்குள் அமர வைக்காமல் வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
அந்த மாணவரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. அவரது தாயார் வீட்டு வேலை செய்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மாணவனின் தாயாரை பள்ளிக்கு வரச் சொன்னஆசிரியர்கள், அவரது மகனை ஒழுங்காகப் படிக்கச் சொல்ல வேண்டும் என்றும், இல்லையெனில் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்லுமாறும் கூறியதாகத் தெரிகிறது.
தான் ஒரு மருத்துவர் வீட்டில் வேலை செய்து வருவதாகவும், உடனடியாக பள்ளிக்கு வர இயலாது என்றும் அந்தப் பெண் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தியதால், அவர் பணிபுரிந்து வந்த மருத்துவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவத்தின் தன்மையை அறிந்த அந்த மருத்துவர், அந்தப் பெண்ணை உடனடியாக பள்ளிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் உள்ளூர் செய்தியாளர்களுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் பள்ளிக்கு சென்று எவருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் செய்தி சேகரித்தனர்.
அப்போது, மாணவர் வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதாமல் வெளியே அமர வைக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட தகவல்கள் நேரில் உறுதி செய்து கொண்டனர்.
தேர்வு நடைபெறும் மாணவர்களுக்கும், தேர்வு எழுதும் நடைமுறைக்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல், அருகிலிருந்த ஆசிரியரிடம் அனுமதி பெற்ற பின்னரே செய்தியாளர்கள் சம்பவம் தொடர்பாக தகவல்களைச் சேகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அப்போது பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் என்பவர் செய்தியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி உரிமையில் பேசினார் என்றும் புகார் எழுந்துள்ளது.
மேலும், “உங்களை யார் உள்ளே விட்டது? வெளியே போங்கள்” என்று கூறி செய்தியாளர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அவருடன் இருந்த சில ஆசிரியர்களும் செய்தியாளர்களை வசைபாடியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தால் செய்தி சேகரிப்பது செய்தியாளர்களின் கடமை. அதற்காகத்தான் அவர்கள் களத்தில் பணியாற்றுகின்றனர். அதற்காகவே அவர்களை செய்தி நிறுவனம் பணிய அமர்த்தி இருக்கிறது.
தேர்வு நடைபெறும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் செய்தி சேகரிப்பதற்கும், ஒரு பள்ளிக்குள் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் செய்தியாளர்களுக்கு உரிமையும் கடமையும் உள்ளது.
அதிலும் குறிப்பாக, மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் படிப்பில் பின்தங்கியிருக்கிறான் என்பதற்காக அவனை சக மாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது போன்ற மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காகவே அரசாங்கம் சம்பளத்தை உங்களுக்கு வாரி கொடுத்து பணியமர்த்திருக்கிறது
ஆனால் மாணவர்களை மனரீதியாக பாதிக்கக்கூடிய வகையில் நடத்தி இருப்பது கவலை அளக்கிறது
இவற்றையெல்லாம் தவிர்த்து, அவர்களை கல்வியில் முன்னேற்ற வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு.
பத்து மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி அவர்களை முன்னேற்ற வேண்டுமே தவிர, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் நடத்தக்கூடாது என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், அரசுப் பள்ளி என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமானது; எந்த ஒரு தலைமை ஆசிரியருக்கோ, துணை தலைமை ஆசிரியருக்கோ அல்லது தனிப்பட்ட ஆசிரியருக்கோ சொந்தமானது அல்ல.
பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்படும்போது, அதற்கு உரிய முறையில் பதில் அளிப்பதே அதிகாரிகளின் கடமையாகும்.
இந்த சம்பவத்தால் அதிருப்தியடைந்த செய்தியாளர்கள், நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளரிடம் வாய்மொழியாக புகார் தெரிவித்ததுடன், திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் பள்ளி ஆசிரியர்களின் நடவடிக்கை குறித்து முறையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என செய்தியாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில், அவர்களையே மனமுடையும் வகையில் நடத்தும் நிலை தொடரக்கூடாது. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களிடம் இருந்து மாணவர்கள் ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு.
இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, மாணவர் மீது ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என்பதையும், செய்தியாளர்களிடம் ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்களா என்பதையும் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பு: இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு புண்ணியகோடி அவர்களையும் தொடர்பு கொண்டு பேசினோம்.
அதில் என் பார்வைக்கு இந்த விஷயம் வந்தது நான் அந்த பள்ளியில் நேரில் சென்று விசாரித்துக் கொண்டிருக்கிறேன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவசரகுதியில் கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார்.
செஞ்சுருவாங்க... செஞ்சுருவாங்க....!
இதுகுறித்து தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள் சங்கங்களின் ஒன்றான ஊடக உரிமை குரல் (பத்திரிக்கை பாதுகாப்பு சங்கம்) நிறுவனர் திரு வி எம் தமிழன் வடிவில் அவர்கள் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதில் ஊடகவியலாளரை செய்தி சேகரித்து விடாமல் தடுத்ததுடன் ஆபாசமாகவும் ரவுடித்தனமாகவும் பேசிய உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் அவருடன் இணைந்து மிரட்டிய ஆசிரியர்களின் செயலும் கண்டிக்கத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆட்சியர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி எடுக்கவில்லை எனில், முறையாக அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட அலுவலகத்தை முற்றுகையிடுவதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்திருப்பதுடன் இப்படி ரவுடி போன்ற செயல்பட்ட ஆசிரியர்களின் செயலை கடுமையாக கண்டித்துள்ளார்.

admin
