295 கேள்விகள்... 8 மணி நேர விசாரணை! அன்பில் மகேஸை அடுத்த வாரமும் அழைக்க போலீஸ் முடிவு!

295 கேள்விகள்... 8 மணி நேர விசாரணை! அன்பில் மகேஸை அடுத்த வாரமும் அழைக்க போலீஸ் முடிவு!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை:

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் ரெய்டு நடந்த போது இது அரசியல் பழிவாங்கு நோக்கத்துடன் நடத்தப்படும் ரைடு என்று திமுகவின் உடைய தலைமை மற்றும் பலர் விமர்சித்தனர். இந்நிலையில் நேற்று அவரை பல மணி நேரம் விசாரித்த சென்னை மத்திய குற்ற குழு போலீசார் 295 கேள்விகளை கேட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பெருமளவில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், இதுவரை 177 பள்ளிகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளின் பணப் பரிவர்த்தனைகளும் போலீஸாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இடங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த 16-ம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென்டிரைவ்கள், 2 ஹார்டு டிஸ்க்குகள், ஒரு டேப்லெட் மற்றும் ஒரு ஐபேட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.18 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அன்பில் மகேஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு அவர் ஆஜரானார்.

காலை சுமார் 10.52 மணியளவில் ஆஜரான அன்பில் மகேஸிடம், அவருக்கும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரசகுமாருக்கும் இடையிலான தொடர்பு, பணப் பரிவர்த்தனைகள் மற்றும் போலீஸார் ஏற்கெனவே கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

மொத்தம் 295 கேள்விகளை போலீஸார் தயாரித்து வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், அன்பில் மகேஸிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 மணி நேரம் நீடித்த விசாரணை முடிவடைந்த பின்னர் வெளியே வந்த அன்பில் மகேஸ், போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்ததாக தெரிவித்தார்.

மேலும், அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளதாகவும், எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தன்னிடமிருந்து வழக்கு தொடர்பாக எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், தன் மீது தொடரப்பட்டிருப்பது பொய் வழக்கு என்றும் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

அடுத்த கட்ட விசாரணையில் மீதமுள்ள கேள்விகள் தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.