மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் நுகர்வோர் தீர்ப்பாயங்கள்! தமிழக அரசின் முடிவால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம்!
ம.பா. கெஜராஜ்,
வேலூர், ஆக. 31–
நுகர்வோர் தீர்ப்பாயங்கள் எந்த விதத்திலும் நடை மற்றும் சிரமங்கள் இன்றி செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரியில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், தமிழகத்தில் உள்ள நுகர்வோர் தீர்ப்பாயங்களின் கட்டமைப்புகளை திறம்பட பயன்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவும், நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்காடிகள் நுகர்வோர் தீர்ப்பாயங்களை எளிதில் அணுகுவதற்கும் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நிலை அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது.
அதில், தற்போது 32 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயங்களை 14 மாவட்டங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அறிவிக்கையின்படி, தமிழகத்தில் சென்னையில் வடக்கு, தெற்கு என நுகர்வோர் தீர்ப்பாயங்கள் செயல்படும். திருவள்ளூர் நுகர்வோர் தீர்ப்பாயம் செங்கல்பட்டில் உள்ள சொந்த கட்டடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
நீலகிரி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயங்கள் ஈரோட்டுடனும், வேலூர் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் கிருஷ்ணகிரியுடனும், சேலம் தீர்ப்பாயம் நாமக்கல் மாவட்டத்துடனும் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் நுகர்வோர் தீர்ப்பாயங்கள் அருகிலுள்ள பிற மாவட்டங்களுடன் இணைக்கப்பட உள்ளன.
வேலூர் வழக்காடிகளுக்கு சிக்கல்
இந்த மாற்றத்தால் வேலூர் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் கிருஷ்ணகிரி மாவட்டத்துடன் இணைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வழக்காடிகளும் வெகு தொலைவில் உள்ள கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் கூறுகையில், தமிழக அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காக பல மாவட்டங்களின் தீர்ப்பாயங்களை வேறு மாவட்டங்களுடன் இணைப்பது நடைமுறையில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறையும் வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் நேரமும் பணமும் விரயமாகும். குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த நுகர்வோர் தங்களது குறைகளைத் தீர்ப்பாயங்களில் தெரிவிப்பதற்கே பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
மேலும், தீர்ப்பாயங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தீர்ப்பாய தலைவர் மற்றும் உறுப்பினர்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவர்.
எனவே, நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு, நுகர்வோர் தீர்ப்பாயங்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட்டு, தற்போதைய நடைமுறையைத் தொடர வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

admin
