பார்சல் வாங்கிட்டு போடா!” – வாடிக்கையாளரிடம் திமிராக பேசிய ஹோட்டல் நிர்வாகம்; கொலை மிரட்டல் புகாரில் உரிமையாளர் மீது வழக்கு!
செய்தி: கு. அசோக்
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான ஹோட்டல் அனுசுயாவில், உணவருந்தச் சென்ற வாடிக்கையாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அடிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாக ஹோட்டல் நிர்வாகி மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் தேதி மதியம் பழைய காட்பாடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முனுசாமி, தனது உறவினருடன் ஹோட்டலுக்குச் சென்று பரோட்டா, ஆம்லெட் மற்றும் சிக்கன் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார். முதலில் பரோட்டா மற்றும் ஆம்லெட் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னரே சிக்கன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முனுசாமி கேள்வி எழுப்பியபோது, ஹோட்டல் நிர்வாகி ஒருமையில் பேசி, “பார்சல் வாங்கிட்டு போடா” எனக் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், முனுசாமியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அடிக்க முயன்றதாகவும், கழுத்தை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரை உணவகத்தை விட்டு வெளியேற்றியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்” என முனுசாமி கூறியபோது, “நீதிமன்றத்தில் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது; காவல்துறையும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது” என ஹோட்டல் நிர்வாகி கூறியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முனுசாமி அளித்த புகாரின் பேரில் காட்பாடி காவல்துறையினர் ஹோட்டல் நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

admin
