நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது லாரி மோதி விபத்து: வேலூர் தந்தை உயிரிழப்பு!
செய்தி: வி.டி. வித்தியாசாகர்
கதிரி, ஆக. 31–
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சலவன் பேட்டை, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த கணேஷன் என்பவர் லாரி ஓட்டி வந்துள்ளார். அவரது லாரி பதிவு எண் KA-01-C-4671 ஆகும்.
இந்நிலையில், கடந்த 29.08.2026 அன்று லாரியில் குழாய்களை ஏற்றிக்கொண்டு பல்லாரியில் இருந்து கம்மம் நோக்கி புறப்பட்டுள்ளார். பின்னர் 30.08.2026 அதிகாலை சுமார் 5.30 மணியளவில், அனந்தபுரம் பகுதியில் இருந்து கதிரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஹரீஷ் பள்ளி அருகே கங்கம்மா மோரிக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது சாலையின் நடுப்பகுதியில் TN-18-BQ-2638 என்ற பதிவு எண் கொண்ட டிரக் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் ஓட்டுநர் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அஜாக்கிரதையாக வாகனத்தை நிறுத்தியிருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கணேஷன் ஓட்டி வந்த லாரி, அந்த டிரக்கின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பகுதி மற்றும் கேபின் கடுமையாக சேதமடைந்தது. படுகாயமடைந்த கணேஷனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கதிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கணேஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன் பிரசாந்த் கணேஷன், கதிரி ரூரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விபத்துக்கு காரணமான TN-18-BQ-2638 டிரக் ஓட்டுநர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என அவர் தனது புகாரில் கோரியுள்ளார்.

admin
