கோரிக்கைகள்: சோளிங்கர் அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்!
கு. அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மேல்வெங்கடாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கல்லூரி நேரத்திற்கு ஏற்றவாறு சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இருந்து போதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், கல்லூரி வளாகத்தில் விளையாட்டு மைதானம், நூலகம், மாணவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் கேன்டீன், கல்லூரியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்தல், கல்லூரி எதிரே மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேகத்தடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கல்லூரி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவர்கள் கூறுகையில், சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு வருவதற்கு கல்லூரி நேரத்திற்கு ஏற்றவாறு போதிய பேருந்து வசதி இல்லாததால், தினமும் காலதாமதமாக கல்லூரிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. அதேபோல், கல்லூரி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் முறையான பேருந்து வசதி இல்லை. எனவே, கல்லூரி நேரத்திற்கு ஏற்றவாறு பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், கல்லூரிக்கு சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், நூலகம், கேன்டீன் வசதி மற்றும் கல்லூரி எதிரே வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

admin
