RTI உரிமைக்கு வந்த சிக்கல்... ஒரே நாளில் வாபஸ்! மனித உரிமை, காவல் விசாரணை தகவல்களுக்கு தடை தப்பியது!

RTI உரிமைக்கு வந்த சிக்கல்... ஒரே நாளில் வாபஸ்! மனித உரிமை, காவல் விசாரணை தகவல்களுக்கு தடை தப்பியது!

செய்தி: ம.பா. கெஜராஜ்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கக்கூடிய முக்கியமான தகவல்களுக்கு திடீரென தடை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மனிதவள மேலாண்மை (R) துறை, 21.09.2026 அன்று வெளியிட்ட G.O.Ms.No.57 மூலம், பொதுத்துறையின் சட்டம்–ஒழுங்குப் பிரிவை தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் பிரிவு 24(4)-ன் கீழ் “Intelligence and Security Organisation” என அறிவித்தது.

அரசாணையின் முக்கியமான வாசகம்:

“The Governor of Tamil Nadu hereby specifies the Public (Law and Order) Department being an Intelligence and Security Organization established by the Government of Tamil Nadu for which the said Act shall not apply.”

அதாவது, அந்தத் துறைக்கு RTI சட்டம் பொருந்தாது என்பதே அந்த அறிவிப்பின் அடிப்படை.

இதன் தாக்கம் சாதாரணமானதாக இருக்கவில்லை. சட்டம்–ஒழுங்குத் துறை கையாளும் காவல் துறை துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கைகள்,

காவல் காவலில் உயிரிழப்புகள், காவல் சித்ரவதை, விசாரணைக் கைதிகள் மரணம், தேசிய மனித உரிமை ஆணையம் தொடர்பான விவகாரங்கள்,

மாணவர்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், சாதி மற்றும் மத மோதல்கள், அரசியல் காரணங்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் அந்தப் பிரிவின் பணிகளில் இடம்பெறுகின்றன.

மேலும் தடுப்புக் காவல், ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள், சட்டம்–ஒழுங்கு தொடர்பான மத்திய அரசுக்கான அறிக்கைகள், நாடாளுமன்ற கேள்விகளுக்கான பதில்கள் உள்ளிட்ட விவகாரங்களும் அந்தத் துறையின் செயல்பாடுகளில் அடங்குகின்றன.

இதனால், இந்த அரசாணை அமலுக்கு வந்திருந்தால் பொதுமக்கள் கேள்வி எழுப்பும் பல முக்கியமான அரசு பதிவுகளுக்கான RTI வழி சுருங்கியிருக்கும் என்ற அச்சம் தகவல் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தது.

குறிப்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், காவல் நிலைய மரணங்கள், காவல் சித்ரவதை, துப்பாக்கிச்சூடு மற்றும் இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் அரசு பதிவுகளை அறியும் வாய்ப்பு என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த அரசாணைக்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தமிழக அரசு தற்போது அந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

அதன்படி, 21.09.2026 அன்று வெளியிடப்பட்ட G.O.Ms.No.57 தற்போது ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை என்பது அரசு அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் ஒரு சட்டப்பூர்வமான வழி. அந்த வழி எங்கு குறுக்கப்பட்டாலும், அதன் தாக்கம் முதலில் சாதாரண மக்களுக்குத்தான் ஏற்படும்.

ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதற்கு பொதுவெளியில் எதிர்ப்பு எழுந்து, பின்னர் அதே அரசாணை வாபஸ் பெறப்பட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிர்வாகமே வெளிப்படையான நிர்வாகம். அந்த வெளிப்படைத்தன்மையின் கதவு மீண்டும் திறந்தே இருக்க வேண்டும் என்பதே தகவல் உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.