ஏசி கோச்சில் கஞ்சா கடத்தல்! கோடிகளில் புரளும் நெட்வொர்க்? 25 கிலோ சிக்கியது
செய்தி: ஜி.குலசேகரன்,
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கிச் சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
காட்பாடி முதல் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை ரயிலின் பின்புறம் உள்ள பொதுப்பெட்டியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஆம்பூர்–ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, பொதுப்பெட்டியில் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஒரு பேக்கை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதில் 12 பண்டல்களில் மொத்தம் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அதனை ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில், பல மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் குறிப்பாக ஏசி பெட்டிகளை பயன்படுத்தி கஞ்சா பண்டல்களை கடத்தும் முறையும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கஞ்சா கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாலும், சட்டரீதியான நடைமுறைகளில் அவர்கள் விடுதலை பெறும் சம்பவங்கள் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சா கடத்தலுக்குப் பின்னால் செயல்படும் நெட்வொர்க்குகள், கைது செய்யப்படும் நபர்களுக்கு சட்ட உதவி உள்ளிட்டவற்றுக்காக பெருமளவில் பணத்தை செலவிடுவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
“நாங்கள் உயிரைப் பணயம் வைத்து கஞ்சா கடத்தல்காரர்களை பிடிக்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் பெரிய நெட்வொர்க்கை கட்டுப்படுத்தாமல் விட்டால், கடத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என காவல்துறை தரப்பில் வேதனை தெரிவிக்கப்படுகிறது.
25 கிலோ கஞ்சா சிக்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நெட்வொர்க் எவ்வளவு பெரியது? என்பது குறித்து ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

admin
