உளவுத்துறை கொடுத்த உஷார் தகவல் ...ஆளுங்கட்சிக்கு சவால் விடும் பெருந்துறை ! மீண்டும் ஒரு அரசியல் யுத்தம்! அதிமுக – திமுக வியூகம்; தவெக குறிவைக்கும் வெற்றிக் கோட்டை!
செய்தி: ம.பா. கெஜராஜ்
தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம், அரசியல் வியூகங்கள், கட்சிகளுக்குள் நடைபெறும் நகர்வுகள் எனப் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி தனி அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பெருந்துறை தொகுதி என்றாலே பாரம்பரியமாக இரட்டை இலை சின்னத்தின் ஆதிக்கம் நினைவுக்கு வரும். 1996 தேர்தல் மட்டும் இந்த அரசியல் போக்கிலிருந்து மாறுபட்டது.
2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ். ஜெயக்குமார் 70,302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட தொப்பு என்.டி. வெங்கடாசலம் 60,609 வாக்குகளையும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வி.பி. அருணாசலம் 59,483 வாக்குகளையும் பெற்றனர். வெற்றி வித்தியாசம் 9,693 வாக்குகள் மட்டுமே.
தற்போது பெருந்துறை தொகுதி காலியாகியுள்ள நிலையில், இடைத்தேர்தல் களம் மீண்டும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கெனவே வெற்றி பெற்ற ஜெயக்குமார் தவெகவில் இணைந்துள்ளதால், அவர் மீண்டும் அக்கட்சி சார்பில் களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் அரசியல் செல்வாக்கு, தொப்பு வெங்கடாசலத்தின் ஆதரவாளர்களின் நிலைப்பாடு உள்ளிட்டவை முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், முத்துசாமியின் ஆதரவாளர்களில் 500-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகக் கூறப்படும் தகவலும் தொகுதி அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
அதிமுகவும் திமுகவும் தங்களது தேர்தல் கட்டமைப்பை வலுப்படுத்தும் நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் பெருந்துறையை முக்கிய இலக்காகக் கருதுகிறது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் ஏற்படும் மாற்றங்கள் இந்த இடைத்தேர்தலில் கவனிக்கப்படும்.
பெருந்துறையில் தவெக வெற்றி பெற்றால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பாரம்பரிய அரசியல் ஆதரவுத் தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த விவாதம் மேலும் வலுப்பெறும்.
அதே நேரத்தில் அதிமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்கவைக்க வேண்டிய அரசியல் சவாலையும் எதிர்கொள்ளும்.
பெருந்துறை இடைத்தேர்தல் என்பது ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் மட்டுமல்ல; கொங்கு மண்டல அரசியல் களத்தில் மூன்று முக்கிய கட்சிகளின் வாக்கு வலிமையை வெளிப்படுத்தும் முக்கியமான அரசியல் களமாகவும் அமையப்போகிறது.
எது எப்படி இருப்பினும் உளவுத்துறை ஆளுங்கட்சிக்கு ஒரு அலர்ட் தகவலை வழங்கி இருக்கிறதாம் எந்த விஷயத்தையும் மூடி மறைத்து பெருமிதம் படுத்தி சொல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லி இருப்பதால் ஆளுகட்சி உஷார் ஆகி களத்தை சமன்படுத்தும் வேளையில் இறங்கி விட்டனராம்.

admin
