தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்ற 2,000 தூய்மைப் பணியாளர்கள் களத்தில்! 420 வாகனங்களுடன் வேலூர் மாநகராட்சி அதிரடி தூய்மைப் பணி!

 தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்ற 2,000 தூய்மைப் பணியாளர்கள் களத்தில்! 420 வாகனங்களுடன் வேலூர் மாநகராட்சி அதிரடி தூய்மைப் பணி!

செய்தி:கு.அசோக்,

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்குப் பிறகு வேலூர் மாநகரின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் குவிந்துள்ள பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் மொத்தம் 2,000 தூய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக முக்கியச் சாலைகள் மற்றும் தெருக்களில் சிதறிக் கிடக்கும் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

  இதனைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகளைச் சேகரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

வேலூர் மாநகராட்சியில் வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 240 டன் குப்பைகள் வீடுகள்தோறும் சேகரிக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளுக்கான அட்டைகள், இனிப்புப் பெட்டிகள், பட்டாசுக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் கூடுதலாக 20 டன் குப்பைகள் உருவாகும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

   குப்பைகளை விரைந்து அகற்றுவதற்காக 150 பேட்டரி வாகனங்கள், 100 டாடா ஏஸ் வாகனங்கள், 150 மூன்று சக்கர மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் 20 கனரக வாகனங்கள் என மொத்தம் 420 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  குறிப்பாக, பட்டாசுக் கழிவுகளில் வெடிக்காத பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளதால், அவற்றை மற்ற குப்பைகளுடன் சேர்க்காமல் தனியாகச் சேகரித்து பாதுகாப்பான திறந்தவெளிப் பகுதியில் தரம் பிரிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் வெடிக்காத பட்டாசுகள் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. வெடிக்காத பட்டாசுகள் இரண்டு நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அவற்றின் வெடிக்கும் தன்மை முழுமையாகக் குறைந்த பின்னரே மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும், மறுநாளே மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாநகரின் சுகாதாரத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  என்ன சுத்தம் செய்து என்ன பயன்? அவை முழுவதும் பாலாற்றில் தான் கொட்டப்படும்.