வழக்கறிஞரை தேர்வு செய்வது உங்கள் உரிமை! நீதிமன்ற காவலர்கள் கட்டாயப்படுத்தினால் மூடிய உறையில் புகார் கொடுக்கலாம்!

வழக்கறிஞரை தேர்வு செய்வது உங்கள் உரிமை! நீதிமன்ற காவலர்கள் கட்டாயப்படுத்தினால் மூடிய உறையில் புகார் கொடுக்கலாம்!

செய்தி: ம.பா.கெஜராஜ்,

திருப்போரூர் நீதிமன்றத்தில் வழக்காடிகளின் கவனத்திற்கு முக்கிய பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நீதிமன்ற நீதிபதிக்கு இளம் வழக்கறிஞர்கள் தபால் மூலம் அளித்த புகார்களில், நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சில காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள், தாங்கள் கூறும் குறிப்பிட்ட வழக்கறிஞர்களை மட்டுமே வழக்குகளில் நியமிக்க வேண்டும் என வழக்காடிகளை கட்டாயப்படுத்துவதாகவும்,

அவ்வாறு குறிப்பிட்ட வழக்கறிஞரை நியமித்தால் மட்டுமே விரைவாக உத்தரவு கிடைக்கும் எனக் கூறி, சில வழக்கறிஞர்களிடம் வழக்குகளை அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்நீதிமன்றத்தில் தொழில் புரியும் பிற வழக்கறிஞர்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற தவறான வாக்குறுதிகளை வழக்காடிகள் நம்ப வேண்டாம் என்றும், தங்களது விருப்பப்படி எந்த வழக்கறிஞரிடமும் தங்களின் வழக்கை ஒப்படைக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இனிவரும் காலங்களில் நீதிமன்ற காவலர்களோ அல்லது நீதிமன்ற அலுவலர்கள் எவரேனும் இதுபோன்று தவறான வாக்குறுதிகளை அளித்தால், அதுகுறித்து மூடிய உறையில் புகாரை தயாரித்து, திறந்த நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு நீதிபதியிடம் நேரடியாக அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிப்பவர்களின் அடையாளம் வெளியில் தெரிவிக்கப்படாது என்றும் நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவின்படி,
தலைமை எழுத்தர்,
மா.உ.நீ.ந.நீ./திருப்போரூர்