அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி இன்சூரன்ஸ்!வாரி வழங்கும் தமிழக அரசு! முதல்வர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாத மருத்துவமனைகள்!

அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி இன்சூரன்ஸ்!வாரி வழங்கும் தமிழக அரசு! முதல்வர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாத மருத்துவமனைகள்!

ம.பா.கெஜராஜ்,    

 அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு வழங்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், அரசு ஊழியர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தாலோ, விபத்தால் நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீடு தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்க வழி செய்யப்பட்டிருக்கிறது.

 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. இன்றைய காலகட்டத்தில், பொது சந்தையில் இந்த காப்பீடுகளை பெற தனிநபர்கள் பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது.

  அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பெரும் செலவை தவிர்த்து, ஆயுள் காப்பீடு, தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவற்றை அவர்கள் கட்டணமின்றி பெற அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக முன்னோடி வங்கிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக, பல சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.

  மேலும், 'அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தாலோ, விபத்தால் நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீடு தொகையாக ரூ.1 கோடி நிதி, விபத்தில் உயிரிழந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டிய மகளின் திருமண செலவுக்காக ஒரு மகளுக்கு தலா ரூ.5 லட்சம் என 2 மகள்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கலாம்.

  விபத்தால் உயிரிழந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மகளின் உயர்கல்விக்கான உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வரையும், பணிக்காலத்தில் அரசு அலுவலர்கள் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சமும் வங்கிகள் வழங்கும் என்று சட்டப்பேரவையில் தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்.

  இந்நிலையில், அரசு ஊழியர்கள் தங்களது ஊதிய கணக்கை பராமரித்து வரும் பட்சத்தில், எந்தவித கட்டணமும் இல்லாமல் இந்த சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் முன்வந்துள்ளன.

   இது மட்டுமின்றி, தனிநபர் வங்கி கடன், வீட்டு கடன், கல்வி கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கவும் இந்த வங்கிகள் முன்வந்துள்ளன.

  இதை உறுதி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அரசு சார்பில் கருவூலம், கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்கள் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் முருகானந்தம், நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன், நிதித் துறை செயலர் (செலவுகள்) எஸ்.நாகராஜன், கருவூலம், கணக்குகள் துறை இயக்குநர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், 'களஞ்சியம்' செயலி மூலமாக அரசு ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் சம்பள கணக்கு வைத்துள்ள வங்கி கணக்குகளில் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை உறுதி செய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பு:-அப்படியே முதல்வர் காப்பீட்டு திட்டத்தை பல பெரிய மருத்துவமனைகள் ஏற்பதில்லை. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் முதல்வர் பார்வைக்கு சம்மந்தப்பட்டவர்கள் கொண்டு சென்றால் நலம்.