ஈரானை களேபரம் செய்த இஸ்ரேல் அமெரிக்கா! பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

ஈரானை களேபரம் செய்த இஸ்ரேல் அமெரிக்கா! பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

 எஸ்.பென்சமீன்,

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை; மகள், மருமகன், பேத்தியும் பலி மக்கள் கண்ணீர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

  அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நேற்று முன்தினம் நடத்திய கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன், பேத்தியும் கொல்லப்பட்டனர். மேலும் ராணுவ அமைச்சர் அமீர் நசீர்ஸாதே, ராணுவ தலைமை தளபதி உட்பட 40 தலைவர்களும் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்றும் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர்.

    இதில், அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஆப்ரகாம் லிங்கனை ஏவுகணை வீசி தாக்கியதாக ஈரான் அறிவித்தது. அதே நேரத்தில் இந்த போரில் 3 வீரர்கள் பலியாகிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

   ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் அது இருநாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும்.

   இதனால் அணு ஆயுதம் தயாரிப்பை நிறுத்துவதாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

  ஓமன் நாட்டின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையே ஜெனீவாவில் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனளிக்கவில்லை.

  இதனால் அதிபர் டிரம்ப் ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். நேற்று முன்தினம் காலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் சேர்ந்து ஈரான் மீது கூட்டாக வான்தாக்குதலை தொடங்கின.

   இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படை தளங்கள், தொடர்பு உடைய பகுதிகள் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து அந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர்.

   அமெரிக்காவும் இஸ்ரேல் நாடும் சேர்ந்து ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தின. போர் விமானங்கள், போர்க்கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் மூலம் ஈரானில் ஒரே நாளில் மட்டும் 100 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

  இதில் டெஹ்ரானில் உள்ள அரசு துறை அலுவலகங்கள் அனைத்தும் குறிவைத்து தகர்க்கப்பட்டது.

  இதுதவிர ஈரான் அதிபர் அலுவலகம், கமேனியின் அலுவலகம், அவரது இல்லம், அணுசக்தி திட்ட அமைப்பின் கட்டிடங்கள் தரைமட்டமாகின. டெஹ்ரானுக்கு அருகே உள்ள பள்ளி கட்டிடம், மினாப் என்ற இடத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் தாக்குதல்கள் நடந்தன. இதில், 148 மாணவர்கள் உயிரிழந்தனர்.

பிரதமர் ஆலோசனை!

 அப்படியிருக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

   அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானசேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

 இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் 350-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். இஸ்ரேலில் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஈரானில் 4,000 இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

  இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவகல்கள் தெரிவிக்கின்றன.