திங்கள் மனு மீது நோ ஆக்ஷன்! தீய சக்தியின் ஓதாவில் பணிக்கு செல்லாமலேயே சம்பளம் பெறுகிறாரா?
ம.பா.கெஜராஜ்,
டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக உள்ள நபர் பணிக்கு வராமலேயே அரசு சம்பளம் பெற்று வருகிறார், அவர் மீது நடவடிக்கை கோருவதுடன், புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் எலைட் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள ஒர்க் ஷாப்புகளுக்கு மிகுந்த இடைஞ்சலையும், போக்குவரத்துக்கு கேடும் ஏற்படுத்தி வருகிறது எச்.ஷரிப்பாஷா என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்துவிட்டு நடவடிக்கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அதே போல் காகிதப்பட்டரையில் சாலையோரத்தில் வழிபாட்டுதலத்தின் அருகில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளினால் தினமும் விபத்து ஏற்படுகிறது, போதை ஆசாமிகள் ரோட்டிலேயே அமர்ந்து மது குடித்துவிட்டு அரை நிர்வாணமாக காட்சியளிக்கின்றனர். இதனால் பெண்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தப்படுகிறது. அவற்றை அங்கிருந்து அகற்றும்படி அந்த புகார் மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு சுன்னத் ஜாமாஅத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளர் எச்.ஷரிப்பாஷா என்பவர் தான் இந்த புகார் மனுவை அளித்தவர் ஆவார்.
இது குறித்து அவரிடம் பேசினோம்.
நான் கடந்த 18.05.2026 ஆம் தேதியன்று அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அவர்களிடம் திங்கள் மனு ஒன்றை அளித்தேன்.
டாஸ்மாக்கின் ஒரு சில கடைகளில் ஏற்படும் ஒழுங்கீனங்களை சுட்டிக்காட்டி அவற்றை கலைய நடவடிக்கை கேட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த வகையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெஞ்சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. கடை எண் 11344. இந்த மதுகடையில் ஆனந்த்குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் பணிக்கே வருவதில்லை. அதற்கு அங்குள்ள சிசிடிவி கேமிராக்களே சாட்சி.

அவரைப் பற்றி உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பினால் மேயரின் கணவர் என்று சொல்லி மிரட்டுகிறாராம். அரசு பணி நேரத்தில் கொணவட்டத்தில் உள்ள திமுகழக அலுவலகத்தில் அமர்ந்துக் கொண்டு கட்டபஞ்சாயத்து நடத்துகிறார்.
அதே போல் மேற்படி மதுகடையில் மது வாங்க வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் லைனில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்வதால் அங்கு பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் இந்த மதுக்கடையில் மது வாங்குபவர்கள் பக்கத்தில் உள்ள பல ஒர்க்ஷாப்புகளின் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மது குடித்துவிட்டு அங்கேயே இயற்க்கை கழிவுகளை கழித்து பலருக்கு தொல்லை ஏற்படுத்துகிறார்கள்.
அதே போல் காகிதப்பட்டரை மெயின் ரோட்டில் அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகளும், இல்லீகல் பார்களும் உள்ளன. மேற்படி டாஸ்மாக் கடைகளினால் போக்குவரத்து நெரிசலும் தள்ளுமுள்ளுவும் ஏற்படுகிறது, ரோட்டிலேயே அடிதடி சம்பவங்களும் நடக்கின்றன. மேலும் போதை ஆசாமிகள் ரோட்டிலேயே அமர்ந்து மது குடித்துவிட்டு அரை நிர்வாணமாக காட்சியளிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுத்தப்படுகிறது. வடக்கு காவல் நிலைய அதிகார எல்லைக்குள் செயல்படும் இந்த கடை அருகே இரண்டு வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.
ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் நான் அளித்துள்ள இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் மேற்பார்வையாளர் ஆனந்த்குமார் தினமும் பணிக்கு வர நடவடிக்கை எடுக்கும்படியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள மேற்படி டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தேன் என்று சொன்ன ஷரிப்பாஷா, இந்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.
இது குறித்து விவரம் அறிய டாஸ்மாக்கின் வேலூர் மாவட்ட மேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு விவரம் அறிய முற்பட்டோம். ஆனால் அவர் இணைப்பில் வரவில்லை.
அடுத்ததாக பணிக்கே வருவதில்லை என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த ஆனந்த்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம்.
என் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. நான் பணிக்கு ஒழுங்காகவே செல்கிறேன் என்று இணைப்பை துண்டித்தார்.
எது எப்படி ஆயினும் மேற்படி திங்கள் மனு மீது முழு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்கு குறிப்பிட்ட கடைகளில் தொடரும் அவலங்களே சாட்சி.
இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை போலும்.

admin
