ட்ரெண்ட்ஸ் ' துணிக்கடையில் குபீர் தீ! வெண்டிலேஷன் இல்லாமல் அனுமதியா?

ட்ரெண்ட்ஸ் ' துணிக்கடையில் குபீர் தீ! வெண்டிலேஷன் இல்லாமல் அனுமதியா?

கு.அசோக், 

   வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் இன்று காலை மின்சாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

   இந்த மின் தடையின்போது, காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகில் அமைந்துள்ள ட்ரெண்ட்ஸ் ' ஷோரூம் துணி கடை இயங்குவதற்காக ஜெனரேட்டர் இயக்கப்பட்டு வந்தது.

   ஷோரூம் தரைதளத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பழுது உண்டானது. இதனால் ஜெனரேட்டரிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியதுடன் தீப்பற்றிக் கொண்டது. 

    சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது இதில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் ஷோரூம் தரைதளத்தில் தீ விபத்து ஏற்பட்டு புகை பரவியதை உடனடியாக உணர்ந்த அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர்.

   டிரெண்ட்ஸ்  ஷோரூமிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி வழியே சென்ற  பொதுமக்களும் அங்கு உடனடியாகக் குவிந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

   இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, காட்பாடி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர். விருதம்பட்டு காவல் நிலையத்தினர் போக்குவரத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 மேலும், தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இந்தச் சம்பவத்தால் காட்பாடி பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இம்மாதிரி கட்டிடங்களுக்கு (ஷோரூம்களுக்கு) மாநகராட்சி அதிகாரிகள் இஷ்டத்துக்கும் அனுமதியை தூக்கிக்கொடுத்து இனிப்பு பொட்டலங்களை பெற்றுக் கொள்கிறார்கள். வெண்டிலேஷன் கூட இல்லையே விபத்து ஏற்பட்டால் பிரச்சனை வருமே என்பதை பற்றியெல்லாம் இந்த அதிகாரிகளுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லாததினால் இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்படுகிறது.

 இப்படி சிலர் செய்யும் தவறுகளுக்கு காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் போராடி மக்களுக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டியதாக இருக்கிறது.